அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத் துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது.
இதனால், இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள் அச்சம்தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முழுமையான அளவில் முடிக்கப்படவில்லை. இதனால், எந்தத் துறையிலும் ஆதார் எண்ணை இதுவரை கட்டாயமாக்கவில்லை.

கருவூலத் துறையின் திடீர் உத்தரவு:

எந்தப் பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூலத் துறை வெளியிட்ட கடித விவரம்:தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப் பட்டியல்கள் இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. அதில், பணியாளர்கள் அனைவரின் அடிப்படை விவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன் ஆதார் எண் விபரத்தையும் பதிவேற்றம் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.எனவே, இணையதளத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின்அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பணியை ஜூன் மாத ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்கும்போது முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.சம்பளம் கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள் கருவூலத் துறையிடம்வழங்கப்பட்டு விடும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால் அதை இந்த மாதத்துக்குள்ளே (ஜூன்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், ஜூன் 30-ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்று தெரியவில்லை எனவும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1 comment:

  1. முதலில் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
    முழுமையாக அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்கப் பெறாத நிலையில்...
    இது போல் அறிவிப்பு செய்வது அர்த்தமற்றது. அரசு ஊழியர்களுக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும். அது போல அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்திக் கேட்கக்கூடாது என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி