உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்

உள்ளூர் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவிகள் உடனடியாக உள்ளூர் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

மூடும் அபாயம்மேலூர் அருகே வெள்ளளூர் நாடு என அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் மட்டங்கிப்பட்டி. இந்த ஊரில் 80 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மாணவ-மாணவியர்கள் அதிகமானோர் இந்த பள்ளியில் படித்தனர்.

நாளடைவில் பெற்றோர்களிடையே ஏற்பட்ட தனியார் பள்ளிகளின் மோகத்தினால், தங்களது பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப அவர்களது குழந்தைகளை வெளியூர்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க துவங்கினர். மேலூர், மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணவசதிக்கு ஏற்ப மட்டங்கிப்பட்டி கிராம குழந்தைகள் பள்ளிவிடுதிகளில் தங்கி படித்து வந்தனர். இதனால் மட்டங்கிப்பட்டி அரசு பள்ளியில் மாணவ-மாணவியரின் எண்ணிக்கை 8 ஆக குறைந்து பள்ளியை மூடும் அபாய நிலை ஏற்பட்டது.

கிராம கட்டுப்பாடு

இதனையடுத்து மட்டங்கிப்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி ஏழை, பணக்காரர் என பாகுபாடு பார்க்காமல், தங்களது பிள்ளைகள் அனைவரையும் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மட்டங்கிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தனர். இதனை மீறுபவர்கள் அனைத்து உரிமைகளையும் இழக்க நேரிடும். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட சலுகைகளை இழக்க நேரிடும். ஊருக்குள் எந்த ஒரு தனியார் பள்ளியின் வேன்களும் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர்.

மட்டங்கிப்பட்டி கிராமம் சார்பாக அரசு பள்ளிக்கு ஆசிரியரை நியமித்து அனைத்து வசதிகளையும் செய்வது என ஒருமித்த முடிவு செய்யப்பட்டது. கிராம கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின்னர் மேலூர் மற்றும் வெளி இடங்களில் உள்ள பள்ளிகளில் படித்த 56 பேர் அங்கிருந்து விலகி மட்டங்கிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது படித்து வருகின்றனர். இதன் மூலம் தற்போது மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

சாமி எம்.எல்.ஏ., நிதி உதவி
மட்டங்கிபட்டியில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அரசு பள்ளியை மேம்படுத்த நிதி திரட்டிவருகின்றனர். மேலூர் சட்டமன்ற உறுப்பினர் சாமி, ஏற்கனவே மட்டங்கிபட்டிக்கு ரோடு அமைத்து மதுரையில் இருந்து மட்டங்கிபட்டிக்கு டவுன் பஸ் போக்குவரத்தையும் புதிதாக துவக்கி வைத்து, இந்த பள்ளிக்கு சமையல் கட்டிடம், தண்ணீர் வசதி, கழிப்பறை அமைத்து தந்துள்ளார். தற்போது அவர் 5 லட்சம் ரூபாய் நிதியளிப்பதாக கூறி பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் தெரிவித்ததாகக் கிராம மக்கள் கூறினர்.

வெளி நாடுகளில் வேலை செய்து வரும் மட்டங்கிபட்டியை சேர்ந்தவர்கள் நிதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். ஒரு கிராமத்திற்கு ரேஷன்கடை, அரசு பள்ளிக்கூடம் அமைப்பது என்பது எளிதானது அல்ல. இருக்கின்ற பள்ளிக்கூடத்தை விட்டுவிடக் கூடாது. கல்வி அறிவு மிக முக்கியம். படிப்பில் கிராம மாணவ-மாணவியர் தான் முன்னிலை வகிக்கவேண்டும். ராமேசுவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர்தான் அப்துல்கலாம்.

இந்த பகுதி மக்கள் குடும்பத்தை காப்பாற்ற வெளி நாடுகளில் கொளுத்தும் வெயிலில் கட்டிட கட்டுமான வேலை செய்கின்றனர். மட்டங்கிப்பட்டி பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் உலக அளவில் பெரிய பதவிகளில் வகிக்க வேண்டும். அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தற்போது மகிழ்ச்சி தருகிறது. இதைப்போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் உள்ளூர் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி