அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2015

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா?

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத் துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.


இதனால், அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 8 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள்- குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியமும், ஓய்வூதியத்தையும் அளிக்கும் பணியில் கருவூல அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பளப் பட்டியலை ஆய்வு செய்து உரிய முறையில் ஊதியம் வழங்கும் பணியைச் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், கருவூல அலுவலர்களுக்கு சென்னையில் உள்ள இயக்ககத்தில் இருந்து கூட்டங்களுக்கு அடிக்கடி அழைப்பு விடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு மாதத்துக்குள் இரண்டு அல்லது மூன்று முறையாவது கூட்டம் நடத்தப்படுவதாகப் புகார் கூறப்படுகிறது.


இதுகுறித்து சென்னையில் உள்ள அலுவலர்கள் கூறுகையில், கருவூல அலுவலர்கள், கூடுதல் அலுவலர்களுக்கான கூட்டங்கள் கடந்த 23, 31 ஆகிய தேதிகளில் நடந்தன. அதற்குள்ளாக, அடுத்தக் கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடக்கவுள்ளது.இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரர் விவரங்களைக் கணினிமயமாக்குவது உள்பட 38 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இதைத் தயார் செய்ய 20 நாள்கள் வரை ஆகும். இந்தப் பணியில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியல்களைச் சரி செய்து குறித்த காலத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.மேலும், கருவூலத் துறை என்பது இப்போது புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் துறையாக மாறி விட்டதாகவும் அவர்கள் கூறினர். ஓய்வூதியதாரர் இறந்தால்...: புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் பணி ஒருபுறம் இருக்க, ஓய்வூதியதாரர்கள் வழியிலும் வேறு பிரச்னைகள் வருவதாகத் தெரிவிக்கின்றனர்.ஓய்வூதியதாரர்களுக்கு வங்கி ஏ.டி.எம். அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தினர் கருவூலத்திற்குத் தெரிவிப்பதில்லை.மாதாமாதம் அவர்களுடைய பணத்தை வாரிசுதாரர்கள் எடுத்துவிடுகிறார்கள். ஓராண்டு கழித்து வாழ்வுச்சான்று அளிக்கக் கோரும் போதுதான் தெரியவருகிறது.இவ்வாறு எடுக்கப்படும் பணத்திற்கு தாங்களே பொறுப்பாக்கப்படுவதாகக் கருவூல அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சென்னையில் கருவூல அலுவலர்களின் கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும், மாவட்டக் கருவூல அலுவலர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தொடர்ந்து கூட்டங்களை நடத்தினால், அரசு ஊழியர்களுக்கு குறித்த காலத்துக்குள் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி