ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால் ஆதார் எண் பெற படையெடுக்கும் அரசு ஊழியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால் ஆதார் எண் பெற படையெடுக்கும் அரசு ஊழியர்கள்

ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால், ஆதார் எண்ணைப் பெற அரசு ஊழியர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யும் மையங்களில் கூட்டம் நிரம்பி வருகிறது.தமிழகத்தில் கருவிழிப் படலம், கை ரேகை ஆகியவற்றின் அடிப்படையில் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக முதலில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன்படி ஆதார் எண் அளிக்கப்படும்.ஊதிய பிரச்னை: ஆதார் எண் வழங்க தமிழகம் பின்பற்றும் முறையால், போலி குடும்ப அட்டைகள், அரசுத் திட்டங்களை முறைகேடாகப் பெறுவோர் கண்டறியப்பட்டு எளிதில் களையப்படுவர்.இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களும் ஆதார் எண்ணைப் பெற்று அதை சம்பளம் வழங்கும் அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என கருவூலம்-கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் மாதஊதியம் நிறுத்தப்படும் என சில கருவூலத் துறை அலுவலகங்களில் இருந்து உத்தரவுகள்பிறக்கப்பட்டுள்ளன. இதனால், அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.எண்ணைப் பெற படையெடுப்பு: கருவூலத் துறையின் திடீர் உத்தரவால் ஆதார் எண் வழங்கும் மையங்களை நோக்கி அரசு ஊழியர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக,சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாகத் துறையின் சார்பில் இயங்கி வரும் மையத்துக்கு அரசு ஊழியர்கள் அதிகளவில் வருகின்றனர்.இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறுகையில், ஆதார் எண்ணைப் பெற சம்பந்தப்பட்ட துறையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதை விடுத்து, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆதார் எண்ணைக் கேட்கின்றனர். இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு ஆதார் மையங்களில் பல நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.எழிலகம் மையத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு சுமார் 20 முதல் 25 பேர் வரை வந்து ஆதார் எண்ணுக்காக தங்களது அடிப்படை விவரங்களையும், கருவிழிப் படலம், கை ரேகைகளைப் பதிவு செய்து வந்தனர். ஆனால், இப்போது 50 பேர் வருவதால் கூட்டத்தைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதே நிலைதான் பல்வேறு மையங்களில் ஏற்பட்டுள்ளதாக கருத்து கூறுகின்றனர்.


கருவூலத் துறை குளறுபடி: ஆதார் எண்ணைப் பெறுவதற்கான போதிய ஏற்பாடுகளைச் செய்யாமல், வெறும் உத்தரவுகளை மட்டுமே கருவூலத் துறை பிறப்பிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதார் எண்ணை எத்தனை நாள்களுக்குள் பெற வேண்டும்?ஊதியம் நிறுத்தப்படுமா என்பன உள்ளிட்ட விவரங்களை இதுவரை கருவூலத் துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒரு சில மாவட்டங்களில் கருவூல அதிகாரிகள்-அலுவலர்களின் அச்சுறுத்தலால், தாங்கள் அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி