அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விவரங்களை அட்டவணை வடிவில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு விவரம்:


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சென்னை உயர்நீதிமன்றத்தின் துணைப் பதிவாளரிடமிருந்து (நிர்வாகம்) அரசு அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற்றேன். அதில், 2010 முதல் 2014 பிப்ரவரி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில்12,527 வழக்குகளும், 2014 அக்டோபர் வரை மதுரை கிளையில் 8,475 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக இரு நீதிமன்றங்களும் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உரிய அரசு அதிகாரிகள் ஆஜராவது இல்லை. எனவே, வழக்கில் அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறும், அவர்களை சட்டப்படி தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஒரு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின்தலைமைச் செயலர் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவுகளை குறிப்பிட்டகாலத்தில் நிறைவேற்ற வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டிருந்தது.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும், இந்த விஷயம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.


ஆனால், ஏராளமான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, சுற்றறிக்கையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, முடித்து வைக்கப்பட்டுள்ள வழக்குகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்பது உள்ளிட்ட விவரங்களை அட்டவணை வடிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்குவிசாரணை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி