ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து, வெள்ளிக்கிழமை (அக். 9) மாலைக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.


கடந்த 2009-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின்போது, ஆதார் அட்டைகள் வழங்கும் பணிகள் தொடங்கின. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 90 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன.இந்நிலையில், ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான ஒரு வழக்கில், ""அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை. எனினும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களை பெறுவதற்கும், சமையல் எரிவாயுமானியம் பெறுவதற்கும் மக்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை அளித்தால் அதைப்பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி இடைக்கால உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்தும், அரசின் பிற சலுகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி), இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகிய அமைப்புகளும், குஜராத், ஜார்க்கண்ட் மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.இந்த மனுக்கள், நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.போப்தே, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது "இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்' என்று நீதிபதிகள் அறிவித்தனர்.இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின்சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தண் யோஜனா)உள்ளிட்ட திட்டங்களில் ஆதார் அட்டை முக்கிய பங்காற்றுகிறது.


எனவே, அரசின் மற்ற நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்' என்றார்.அப்போது தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது: இந்த மனுக்களை விசாரிக்க 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டியுள்ளது. இதனால், மற்ற வழக்குகள் பாதிப்படக்கூடும். எனவே, இதுகுறித்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி