கோயில்களில் ஆடை கட்டுப்பாடு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2016

கோயில்களில் ஆடை கட்டுப்பாடு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு வரும் 18-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஜன. 1 முதல் ஆண், பெண் பக்தர்களுக்கு ஆடை, கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


திருச்சியைச் சேர்ந்த ராஜூ என்பவர், கோயில் விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தனி நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.லெக்கின்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளுடன் வரும் பக்தர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அந்தந்த கோயில்களில் நடைமுறையில் உள்ள ஆகம விதிகள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடிக்குமாறு அறநிலையத்துறை கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுடன், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து ஜன. 1 முதல் அனைத்து கோயில்களிலும் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.இந்நிலையில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி தமிழக அறநிலையத்துறை செயலர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில், தமிழகத்தில் ஒவ்வொரு கோயில்களிலும் அந்தந்த கோயில்களின் பழக்கவழக்கத்துக்கு ஏற்ப தனி ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன.திருச்செந்தூர் உள்ளிட்ட சில கோயில்களில் ஆண்கள் மேலாடை அணிந்து செல்லக்கூடாது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இவ்வாறு இருக்கும் போது அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான உடை கட்டுப்பாடு கடைபிடிக்க முடியாது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்பட பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு வட இந்தியவர்கள், வெளிநாட்டினர் அதிகளவில் வருகின்றனர். அவர்களை இந்த ஆடை தான் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.மேலும் குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஆடைகள் அணிந்து வர வேண்டும் என்பதுசாத்தியமற்றது. கோயில்களுக்கு முறையான ஆடை அணிந்து வர வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். அதை கட்டாயப்படுத்த முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சரிகா (22) என்பவர் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவில், பெண்களுக்கு, குழந்தைகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை அமல்படுத்தினால் பெண்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படும். மேலும் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில் பாரம்பரிய ஆடை அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


கோயில் ஒரு பொதுவான இடம். பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்கள் கோயிலுக்கு வருவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி ஆடை கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.விருதுநகர் மாவட்ட ஜனநாயக மாதர் சங்க செயலர் சுகந்தி தாக்கல் செய்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு ஆடை சகிப்பின்மையை காட்டுகிறது. இந்த கட்டுப்பாட்டால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.மேலும் கிராமிய கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தாக்கலான ஒரு மனுவை விசாரித்த தனி நீதிபதி, சம்பந்தம் இல்லாமல் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது சட்டப்பேரவையின் உரிமையில் தலையிடுவதாகும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கொண்டஅமர்வு முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.


அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி வாதிடும்போது, தமிழ்நாடு கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்தந்த கோயில்களின் பாரம்பரியம் மற்றும் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் எனத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த சட்டம் அமலில் உள்ளது போது, தனியாக ஆடை கட்டுப்பாடு விதிப்பது தேவையற்றது என்றார்.மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ரஜினி, நிர்மலாராணி ஆகியோர் வாதிட்டனர். பின்னர், ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஜன.18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி