இன்று கோட்டையை முற்றுகையிட இருந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு நிர்வாகிகள் நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

இன்று கோட்டையை முற்றுகையிட இருந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு நிர்வாகிகள் நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து கைது

இன்று கோட்டையை முற்றுகையிடுவதாக அறிவித்த ஜாக்டோ, ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு புகுந்து அதிரடியாக கைது செய்தனர். நேற்று இரவு வரை அவர்கள் விடுவிக்கப்படாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,  புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வு ஊதியத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு இதுவரை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதையடுத்து தடையை மீறி இன்று கோட்டையை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது.   போராட்டத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் வரை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் வீடு புகுந்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னெச்சரிக்கைக்காக அனைத்து மாவட்டங்களிலும்  அமைப்பில் உள்ளவர்களின் விவரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து, நள்ளிரவில் அவர்களின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து கைது செய்தனர்.  கைதாக மறுத்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தர, தரவென்று இழுத்து அழைத்துச் சென்றுள்ளனர். பல இடங்களில் குடும்பத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பெண்களை போலீசார் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. திருவள்ளூர் ஜெயின் நகரில் வசிக்கும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளரும், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரான தாஸ், நள்ளிரவில் திருவள்ளூர் டவுன் போலீசாரால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார்.கேபிள் டிவி வட்டாட்சியரும், ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவனையும் போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளராகவும், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவராகவும் இருப்பவர் ராஜேந்திரபிரசாத் (52). இவரது வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற போலீசார் அவரை கைது செய்வதாக கூறியுள்ளனர். மோகனூரில் ஆசிரியர் சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், ராசிபுரத்தில் அத்தியப்பன், செந்தில்ராஜா உள்ளிட்ட 10 பேரை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ மாநில துணைத்தலைவர் குமாரவேல் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரகுபதி பெருமாள்புரத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அருள்மரியஜானை மேலப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு சென்ற ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினரை திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சத்யபாமா, வட்டார தலைவர் ராபர்ட், பொருளாளர் ரவி ஆகியோர் தலைமையில் பஸ்சில் சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி அருணாசலபுரம் தெருவில் வீட்டிலிருந்த அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி துரைசிங்கத்தை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரத்திலும் உள்ள நிர்வாகிகளை இரவோடு இரவாக கைது செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேஷ், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் மணிபாரதி, தாளவாடி வட்டக்கிளை செயலாளர் பெருமாள், கொடுமுடி வட்டக்கிளை செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.நள்ளிரவு தொடங்கி நேற்று மாலை வரை இந்த கைது நடவடிக்கை நீடித்தது. பல்வேறு ஊர்களில் இருந்து வேன்களில் சென்னை நோக்கி வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில், தடையை தாண்டி திட்டமிட்டப்படி இன்று கோட்டையை முற்றுகையிட போவதாக ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எல்லைகள் சீல்
ஜாக்டோ-ஜியோ போராட்டக்காரர்கள் சென்னைக்குள் வந்துவிடாதபடி முக்கிய ரயில் நிலையங்களான தாம்பரம் சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நிர்வாகிகளை கைது செய்து அழைத்து செல்ல வசதியாக வேன்களையும் நிறுத்தி உள்ளனர். சென்னைக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

திட்டமிட்டப்படி கோட்டை முற்றுகை
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி சாந்தகுமார் கூறியதாவது: நாங்கள் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஒரு தவறான தகவலை பரப்பியுள்ளார். அவர் கூறுவது முழுக்க, முழுக்க பொய். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை ஆகும். எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஒரு எம்எல்ஏ ஒருநாள் எம்எல்ஏவாக இருந்தால் கூட அவருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு ஓய்வூதியம் கொடுக்கிறது. ஆனால் 58 வயது வரை வேலை செய்யும் எங்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க மறுப்பது ஏன்? எங்கள் போராட்டத்தை ஒடுக்கவே நிர்வாகிகளை போலீசார் அத்துமீறி கைது செய்து வருகின்றனர். இதனால் எங்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். திட்டமிட்டப்படி இன்று சென்னையில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றார்.

1988, 2003ல் நடந்தது போல
ஏற்கனவே கடந்த 1988 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளிலும் இதுபோன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்தபோது, முன்னெச்சரிக்கைக்காக அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது மீண்டும் இந்த சம்பவம் தொடர்கிறது. ஆனால் இந்த முறை போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

 1. நன்றி! நன்றி! ! நன்றி!

  இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்

  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
  உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்

  என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
  தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய

  மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்

  தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்

  தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

  2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி