கல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்கு அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2018

கல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்கு அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

உயர் கல்வி படிப்பதற்காக தகுதியுள்ள மாணவனுக்கு கல்விக் கடன் வழங்காத வங்கிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நவீன். பிளஸ் 2 பொதுதேர்வில், 1,200க்கு, ஆயிரத்து 17 மதிப்பெண் எடுத்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். தனது படிப்பிற்காக ஆரணியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், நவீன் படிக்கும் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான கேம்பஸ் இன்டர்வியூ இல்லை என்பதால் கல்விக் கடன் தர வங்கி மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து நவீன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு எதிராக தீபிகா என்ற மாணவி தொடர்ந்த வழக்கில், அவரது தந்தை கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக்கடன் திட்டத்தில் இடம் பெறவில்லை என்று தீர்ப்பளித்தேன்.
ஆனால், நவீன் பிளஸ் 2  படிப்பில் நல்ல மதிபெண்கள் எடுத்துள்ளார். அவர் படிக்கும் சித்த மருத்துவப் படிப்பும் கல்விக் கடன் திட்டத்தில் வருகிறது. இந்நிலையில், கேம்பஸ் இன்டர்வியூ இல்லை என்ற உப்புச் சப்பில்லாத, அற்ப காரணத்திற்காக அவருக்கு கல்வி கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது.

எனவே, கல்விக் கடன் மறுத்த வங்கி அதிகாரிக்கு 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், அபராதம் இந்த நீதிமன்றம் அதை விரும்பவில்லை. எனவே, கல்விக்கடன் பெற மாணவன் நவீன் தகுதி உள்ளவர் என்பதால் கடன் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கொடுத்த கடனை திருப்பி செலுத்தாத தந்தையால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க கூடாது என்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியின் கல்விக் கடன் வழக்கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தீர்ப்பளித்திருந்தார்.

இந்த நிலையில், மாணவர் நவீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி மாணவனுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கி அதிகாரிகளுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடும் கண்டனம் தெரிவித்து மற்றொரு தீர்ப்பை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி