தேர்தல் முடிவுகள் - 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2019

தேர்தல் முடிவுகள் - 2019 எதிரொலி : ஆட்சியாளர்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையேயான திரை விலக வேண்டும்!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் மாநில அரசின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரோத போக்கிற்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின்கீழ் வேலைவாய்ப்பு தடைச்சட்டம், ஓய்வூதியமின்மை, ஊதிய முரண்பாடுகள், பணியிழப்புகள் போன்றவற்றிற்கு எதிரான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமாக முடிப்பதைப் புறந்தள்ளி நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் கைது நடவடிக்கைகள், பணியிடை நீக்கம், ஊதியப்பிடித்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவற்றை ஏவிவிட்டுத் தோல்வியுறச் செய்த ஊழியர் விரோதப் போக்குகள் ஒவ்வொரு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆறாத தழும்பாக இருந்ததன் வெளிப்பாடு தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைய வழிவகுத்தது. 

இக் கருப்பு நாள்களில் ஆட்சியாளர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் செயல்முறைகளுக்கும் அச்சாணியாக இருக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அந்நியப்படுத்தும் பொருட்டு இழிவாகவும் மலிவாகவும் பொதுமக்கள் முன் பேசியதும் ஏசியதும் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையேயான நல்லுறவைச் சிதைக்கவும் எதிராகத் தூண்டவும் முற்பட்டது வேதனைக்குரியது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில்தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தின்கீழ் கொத்தடிமைகளாக இருந்த இழிநிலையை மாற்றி பணிக்குப் பாதுகாப்பையும் கௌரவத்தையும் வழங்கிப் பெருமைப்படுத்தியது வரலாறு. அதன்பின் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தொடக்கக்கல்விக்கென தனித்துறை தோற்றுவித்து சிறப்பு செய்தார். அவரே, 2003 இல் எஸ்மா, டெஸ்மா கொடுஞ்சட்டங்களை ஏவி இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தம் ஒற்றைக் கையெழுத்தில் பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை 2004 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஓரிடம்கூட வெல்ல முடியாத நிலையையும் 2006 இல் ஆட்சியையும் இழக்க நேரிட்டது அனைவரும் அறிந்ததே!

அதன்பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல் மென்மையான போக்குகளையே தம் இறுதிக்காலம் வரை கடைபிடித்து வந்ததும் வேலைவாய்ப்பு தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவரே பல இலட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிவைத்ததும் விசித்திர, நாடு போற்றும் நற்செயல்களாகும். 

ஆட்சியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே தொழிலாளர் விரோதப்போக்கு இருப்பது நல்லதல்ல. இருவருக்குமிடையில் எப்போதும் ஒருவித இணக்கமும் நல்லுறவும் தொன்றுதொட்டு இருந்து வருவதே சாலச்சிறந்தது. அரசின் இயந்திரத்தைச் சரியான முறையில் செயல்படுத்தவும் வலுப்படுத்தவும் இது மிகவும் உறுதுணையாக இருக்கும். இருப்பினும், அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழல்கள் காரணமாக எழும் உரிமைக்குரலை நசுக்க முயற்சிக்காமல் நியாயமான முறையில் அவற்றிலுள்ள நியாயங்களுக்குச் சுமுக தீர்வு காண்பதும் அரசு முன்வைக்கும் நிதிநிலைமைகளைக் கருத்தில்கொண்டு இணங்கி நடப்பதும் நற்செயல்களாவன. தேவையின்றி முரண்டு பிடிப்பது இருவருக்கும் அழகல்ல. அஃது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி விடும் என்பதற்கு தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு சான்றாகும்.

வேண்டுமென்றே பல்வேறு குளறுபடிகளை விளைவித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை உரிய முறையில் செலுத்த விடாமல் அஞ்சல் வாக்குகளை அனுப்பாமல் விடுதல், அவற்றை பெரும்பாலும் செல்லாத வாக்குகளாக மாற்ற பல்வேறு கெடுபிடி ஆணைகள் இடுதல் ஆகிய இரும்புக்கர நடவடிக்கைகளைப் புறமொதுக்கி 2004 பாராளுமன்ற தேர்தலின்போது அன்றைய அஇஅதிமுக அரசிடம் காட்டிய ஆட்சிக்கெதிரான பெருந்திரள் எதிர்ப்பு மனநிலையை  2019 இல் மீண்டும் அதிதீவிரமாக வாக்கைப் பதிவு செய்துள்ள துர்பாக்கிய நிலை இனிவரும் காலங்களில் எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் நிகழக்கூடாத ஒன்றாகும்.

குறிப்பாக, மொத்தம் பதிவான அஞ்சல் வாக்குகளில் ஆளும் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகளும், எதிரணிக்கு 67 சதவீத வாக்குகளும், மாற்று அணிக்கு 13 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதன் மூலமாக அறிய முடியும். இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று இவர்கள் சார்ந்த குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இவர்கள் பொருட்டு செலுத்திய கூடுதல் வாக்குகளும் ஆளுங்கட்சிக்கு எதிராக முன்புபோலவே அமைந்துவிட்டன. ஏனெனில், ஆட்சியாளர்கள் கூறுவதுபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிநபரல்ல. ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள். அதுபோல் ஒவ்வொரு குடும்பமும் பல குடும்பங்களைத் தம்முள் பிணைத்துள்ளன. ஆக, அரசு விளிக்கும் பொதுமக்களின் ஒரு பெரிய கூட்டம் இவர்களாவர். இவற்றைக் கணக்கில் கொள்வது எந்தவொரு ஆட்சியாளருக்கும் இப்போது மட்டுமல்ல எப்போதும் நல்லது. 

எனவே, இனிவரும் காலங்களில் இப்போது ஆளும் அரசாக இருந்தாலும் சரி, நாளை ஆளப்போகும் அரசாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கிள்ளுக்கீரைகளாகக் கருதுவதைக் கைவிட்டு, அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுப்பதைப் பெருவழக்காக்கிக் கொள்ளுதல் இன்றியமையாதது. இருவருக்கும் இடையிலான தற்காலிக விரிசலைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் இருவருக்கும் பொது. காலம் இப்போதும் கடந்து போய்விடவில்லை. இருதரப்பும் நிகழ்ந்து முடிந்த கசப்பான அனுபவங்களைத் தாய்மை உணர்வுடன் மறந்து ஒருவருக்கொருவர் திறந்த மனத்துடன் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று இங்கு எதுவுமில்லை! திரை விலகுதல் நல்லது.

-------------------முனைவர் மணி.கணேசன்-----

23 comments:

  1. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் எப்பொழுது அரசியல் கட்சிகளின் சார்பு நிலையிலிருந்து விலகி, சுயசார்பு நிலையில் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து களம் காண்கின்றவோ அப்பொழுது நிச்சயம் அவர்களின் போராட்டங்கள் வெற்றி பெறும்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. U don't know teacher value

      Delete
    2. Correct... Vai irukunu eppadi venum nalum pesakudathu.. Antha nelamaila iruntha than athoda kastam theriyum...

      Delete
    3. சாமி நீங்க பள்ளிக்கூடத்தில் படிக்காம வேற எங்க படிச்சு இப்ப இருக்கிற நிலைமைக்கு வந்தீங்க....... ல எலும்பு இல்லாம கையில போனும் இருந்தா என்ன வேணும்னாலும் எழுதுவீங்களா

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. அதெல்லாம் இருக்கட்டும்.. பள்ளிக்கூடத்துக்கு என்றாவது நீங்கள் 9. மணிக்கு போனது உண்டா.. 10 மணிக்கு போற உங்களிடம் பேசுவது ஓட்டைப் பானையில் நீர் ஊற்றுவது போலாகும்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சாமி உங்களோட அனுபவத்தை மட்டும் வைத்து கருத்தை பொதுமைப் படுத்தாதீங்க. நீங்க ஆசிரியராக இல்லேனா ஆசிரியராக ஆகி ஒரு ஆசிரியராக சமூகத்தைப் பாருங்கள். அப்ப புரியும் நீங்க என்ன சொல்றீங்கனு .

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஒரு பையன் செத்தே போயிட்டான்.. அவன கூட்டிட்டு போன சங்கத்துகாரனுங்க முதல் ஆளா ஓடி வந்து கையெழுத்து போட்டு வேலைய காப்பாத்திட்டானுங்க.. பாவம் அந்த ஆசிரியரின் குடும்பம் .. சங்கத்து பேரை சொல்லிட்டு வரும் யாரிடமும் பேசாதீர்கள்.. நல்ல ஆசிரியர்களோடு பழகுங்கள்..

    ReplyDelete
  7. ஆசிரியர்கள் தூய பால் போன்றவர்கள்.. ஆனால், சங்கத்து பேரை சொல்லி பிழைப்பவர்களிடம் இருந்து ஓடி விடுங்கள்.. கருவிலேயே அதுங்கலாம் கிரிமினல் ஸ்..

    ReplyDelete
  8. Unkallukku evalavu sambalam? Theryuma


    ReplyDelete
  9. Unkallukku evalavu sambalam? Theryuma


    ReplyDelete
  10. வேலை என்ற ஒன்றில் இருந்தால் சம்பளம் என்ற ஒன்றை வாங்கத் தான் செய்வார்கள்.. எதுக்கெடுத்தாலும் சம்பளத்த ஏம்பா இழுக்குறீங்க.. சங்கத்துகாரனுங்க பிடியில் mr.unknown இருப்பது தெரிகிறது.. mr.unknown க்கு கவனமாக பதில் அனுப்ப வேண்டும்..

    ReplyDelete
  11. தாங்கள் செய்யும் தவறுகளை பேச்சுத்திறமையால் மறைப்பதில் வல்லவர்கள் ஆசிரியர்கள்

    ReplyDelete
  12. அரசு செய்முறை தேர்வு நடக்கும் சமயத்தில் போராட்டத்தில் இறங்கியவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

    ReplyDelete
  13. அந்த காலத்து ஆசிரியர்கள் மாதிரி இனி வராது.

    ReplyDelete
  14. மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்ன வேலையை ஒழங்காக சொன்ன நேரத்தில் செய்யவில்லையென்றால் தன்டிப்பார்கள். பிறகு பெற்றோர் ஆசிரியரிடம் பிரச்சனை பன்னுவார்கள். ஆசிரியர்களும் அப்படிதான் குறிப்பிட்ட காலத்துக்குள் TET எழுதி பாஸ் பன்ன சொன்னால் பன்னாமல் கோர்ட்டுக்கு போகிறார்கள். சகிப்புத்தன்மைக்கும் ஒரு அளவுன்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி