5-ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2019

5-ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம்!


சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். தனியார் நிறுவன காவலாளி. அவருடைய மகன் மதுரம் ராஜ்குமார்.அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பத்து வயது சிறுவனான அவர், நொடிப் பொழுதில் கவிதைபடைக்கும் தனது ஆற்றலால் இளம்கம்பனாக வலம் வருகிறார். கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே "மதிப்புறு முனைவர்'பட்டம் பெற்று பலரது பார்வையையும் தன் பக்கம்திருப்பியுள்ளார்.வறுமையிலும் கவிதை மீது காதல் கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்ததாலோ என்னவோ, மதுரம்ராஜ்குமாருக்கு பொம்மைகளோடு விளையாடி பொழுது போக்கும் இளம் வயதிலேயே கவிதை எழுதும் தனித்திறன் தானாய் பிறந்து விட்டது. அன்பு,அழுகை,இன்பம், துன்பமென எந்த நிகழ்வையும் கவிதையாக்கும் இச்சிறுவனின் ஆற்றலைக் கண்டறிந்தபெற்றோரும், ஆசிரியர்களும் அவரை ஊக்கப்படுத்தினர். இதனால், நான்காம் வகுப்பு படிக்கும்போதே, "பள்ளி', "மகிழ்ச்சி', "கோபம்',"பட்டம்' உள்ளிட்ட 55 தலைப்புகளில் ரத்தினச்சுருக்கமாய் நல்ல கவிதைகளைப் படைத்தார்.அவருடைய கவிதைகளைச் சேகரித்த இவரது பெற்றோர்,"நல் விதையின் முதல் தளிர்' என்ற தலைப்பில் நுôலாக வெளியிட்டனர். இந் நூலுக்குப் பாராட்டுகளும், பல்வேறு அமைப்பின் விருதுகளும் குவிந்தன.

இச்சிறுவனின் திறனறிந்த "யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எந்த சிறுவனும் நிகழ்த்தாத உலக சாதனையை நிகழ்த்திட, மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது. வறிய நிலையில் மிகுந்த பொருட்செலவை தாங்க முடியாத சூழலிலும், தன்னார்வலர்களின் ஆதரவைப் பெற்ற இவரது பெற்றோர்,தனது மகன் உலக சாதனை படைப்பதற்கு தளம் அமைத்துக் கொடுத்தனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த டிசம்பர் மாதம் 11ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைதொடர்ந்து 10 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பலரும் கொடுத்த பல்வேறு விதமான தலைப்புகளில் 173 கவிதைகளை எழுதி உலக சாதனை படைத்தான். மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் இச் சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

விடுமுறை தினங்களில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று கவிதை பாடி வரும் இச்சிறுவனுக்கு "வாழப்பாடி இலக்கியப் பேரவை' இளங்கம்பன் விருது வழங்கி கௌரவித்தது. இச்சிறுவனின்கவிப்புலமை கண்ட சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், ஏப்ரல் 14- ஆம் தேதி சென்னையில் நடைபெற்றவிழாவில் "மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கி பாராட்டியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் உள்ளிட்டோரின் வாழ்த்துகளையும் மதுரம் ராஜ்குமார் பெற்றுள்ளார்.தமிழ்த் தொலைக்காட்சிகள், பண்பலைகளில் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் வெகு பிரபலமாகிப் போன இச்சிறுவனின் அபரிமித கவியாற்றலும், ஆர்வமும், மன உறுதியும், இவரது பெற்றோர்களின் உந்துதலும், ஊக்கமும், பிற துறைகளிலும் சாதிக்கத் துடிக்கும் சிறுவர், சிறுமியருக்கு நடைமுறை எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என்றால், இதில் சிறுதுளியும் மிகையில்லை."எனது மகனை தனியார் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் போனதால், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தேன்.

இந்த மாற்றமும் கூட எனது மகன் இளங்கவிஞராக மாறியதற்கு ஒரு காரணியானது மறுக்க முடியாத உண்மை. எவ்விதத் திணிப்பும் இல்லாததால் மனதில் தோன்றுகின்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதற்கு அரசுப் பள்ளியும், ஆசிரியர்களும் உதவியாக இருந்தனர். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத எங்கள் குடிசை வீட்டில், பாரதியார், பாரதிதாசன் கவிதைப் புத்தகங்கள் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை.

நான்காம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்குமாறு எனது மகன் மதுரம் ராஜ்குமார் கேட்டதற்கு, நீயே உன் மனதில் தோன்றியதை எழுதிக் கொடு என்றேன். இது தான் இன்று, என் மகன் உலக சாதனைபடைத்த கவிஞராக மாறியதற்கு அடித்தளமாக அமைந்ததாகக் கருதுகிறேன்'' என்றார் மதுரம் ராஜ்குமாரின் தந்தை செல்வக்குமார்.எனது பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கத்தால் எனது எண்ணத்தை கவிதையாக எழுதும் திறனைப் பெற்றேன். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர்சளைக்காமல் பதிலைத்தேடித் தந்தனர்.

சிறுவயதிலேயே நான் கவிதை நூல் வெளியிட்டு உலக சாதனை படைப்பதற்கும், பல விருதுகளைப் பெறுவதற்கும், தமிழறிஞர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாய் மொழிக்கு என்னால் முடிந்த புகழைப் பெற்றுக் கொடுப்பேன். கவிதையில் மட்டுமின்றி கல்வியில்சாதிப்பதே என் எதிர்கால லட்சியம்'' என்கிறார் இளங்கம்பன் மதுரம்ராஜ்குமார்

7 comments:

  1. congrats Rajkumar 👏👏👏👏👏

    ReplyDelete
  2. congrats Rajkumar 👏👏👏👏👏

    ReplyDelete
  3. 2013 batch we like meet educational minister soon. IntrIntere candidates plz contact 9443269942.Tamilarasan, Harur, Dharmapuri dust.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Congratulations ilam kambarae..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி