போதையில் வகுப்பறைக்கு வந்த கல்லூரி மாணவர்களுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை : காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்தி மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்ய உத்தரவு - kalviseithi

Aug 14, 2019

போதையில் வகுப்பறைக்கு வந்த கல்லூரி மாணவர்களுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை : காமராஜர் இல்லத்தை சுத்தப்படுத்தி மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்ய உத்தரவு


மது அருந்தி வகுப்பறைக்கு வந்த மாணவர்களுக்கு ஐகோர்ட் கிளை நூதன தண்டனை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர், தங்கள் நண்பர் பிறந்தநாளை முன்னிட்டு மது அருந்தியுள்ளனர். இவர்கள் மது அருந்திய நிலையில் கல்லூரிக்கு வந்து ஆய்வக வகுப்பில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த குற்றச்சாட்டின் பேரில் மாணவர்கள் 8 பேரின் மாற்றுச்சான்றிதழை திருப்பி வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக 4வது செமஸ்டர் எழுதியதும், வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்களை தொடர்ந்து அதே கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி 8 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ெசய்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மாணவர்கள் மது அருந்தி விட்டு கல்லூரிக்கு சென்றதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில் வெளியேற்றினால், அவர்களது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளனர். இந்த நீதிமன்றத்திலும் ஆஜராகி ஒழுக்கமாக நடந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

எனவே, இந்த மாணவர்கள், நாட்டின் சுதந்திர தினமான ஆக. 15 (நாளை) அன்று விருதுநகரில் கர்மவீரர் காமராஜர் நினைவு இல்லத்தை காலை 10  மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை நினைவு இல்ல முன்பகுதியில் நின்று தமிழில் மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதில், ‘‘மதுவை மறந்து விடு - மனிதனாய் வாழ்ந்து விடு, மது அருந்தாதே - மரியாதை இழக்காதே, குடியை மறந்து விடு - குடும்பத்தை வாழவிடு, குடிப்பதை நிறுத்தி விட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு’’ ேபான்ற வாசகங்கள் இருக்க வேண்டும். இதை கல்லூரி முதல்வர் தரப்பில் உதவி பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும். அவர் அறிக்கை தர வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்.

அறிக்கை அடிப்படையில் மாணவர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு குறித்து இன்ஸ்பெக்டர் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மாணவர்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இது குறித்து அனைவர் தரப்பிலும் ஆக. 19ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி