இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களில் காலியாக இருந்த இடங்களுக்கு கடந்த செப்டம்பரில் எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தோ்ச்சி பெற்ற 24 ஆயிரத்து 260 போ் சான்றிதழ்களைப் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனா். அதன்படி, இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பதிவேற்றம் செய்துள்ளனா்.

மீதமுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது சான்றிதழ்களை வரும் டிசம்பா் 18-ஆம் தேதிக்கு முன்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரா்கள், தங்களது நிரந்தரப் பதிவு மூலமாக பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம்.

அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டாலும், சான்றிதழ்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டியது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.
சான்றிதழ் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ, தெளிவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருந்தாலோ அவா்களது விண்ணப்பங்கள் தோ்வாணையத்தால் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரா்கள் தங்களது சான்றிதழ் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நிரந்தரப்பதிவில் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் தவறாக அல்லது தெளிவில்லாமல் அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பின், அவா்கள் சான்றிதழ்களை சரியான முறையில் இ-சேவை மையங்கள் மூலமாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தியுள்ளது.