அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2020

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமா? மத்திய மந்திரி விளக்கம்


மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக, மத்திய அரசு, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. எம்.பி.க்கள் சம்பளத்தை குறைத்துள்ளது. அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 50 ஆக குறைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

மத்திய மந்திரி விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது:-கடந்த சில நாட்களாக, சில உள்நோக்கம் கொண்ட சக்திகள், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சம்பந்தப்பட்டவர்களின் மனதில் குழப்பம் எழுவதை தவிர்ப்பதற்காக, அதற்கு உரிய மறுப்பு தெரிவித்து வருகிறோம்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை. கொரோனா வைரஸ் சவால் உருவெடுத்ததில் இருந்தே அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்குத்தான் மத்திய அரசும், மத்திய பணியாளர் நலத்துறையும் முடிவுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரசால் நாடு தவிக்கும்போது, கொரோனாவை கையாளும் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டும்போது, சிலர் மத்திய அரசின் செயல்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது.

இதுபோலவே, ஓய்வூதியத்தை 30 சதவீதம் குறைக்கவும், 80 வயதை தாண்டியவர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பொய்ச்செய்தி பரப்பப்பட்டது.ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த மாதம் 31-ந் தேதி, ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவருக்கும் ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி