அறிவியல் உண்மை - பூமியின் புறப்பரப்பு முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இவ்வளவு நீர் சூழக் காரணம் என்ன? - kalviseithi

May 7, 2020

அறிவியல் உண்மை - பூமியின் புறப்பரப்பு முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இவ்வளவு நீர் சூழக் காரணம் என்ன?


நாம் வாழும் பூமி அழகான கோள் ஆகும். இது கண்டங்களையும் பெருங்கடல்களையும் மலைகளையும் ஆறுகளையும் தாவரங்களையும் விலங்குகளையும் மக்களையும் கொண்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டுமே உயிரிகள் வாழ்கின்றன. உயிரிகள் வாழத் தேவையான சூழல் இங்கு உருவானதே இதற்குக் காரணம். பூமி தற்போது இருப்பதைப் போல எப்போதும் அழகாக இருந்ததில்லை. தொன்மையான பூமி வாயுக்களாலும் தூசுகளாலும் ஆன பெரிய கோளமாக இருந்தது என்று கூறுவர். கோளம் சிறியதாகவும் அடர்த்தி மிக்கதாகவும் சுருங்கி , வாயுக்களின் பெரும்பகுதி வெளித்தள்ளப்பட்டு கடினப் பொருட்கள் மட்டும் அப்படியே விடப்பட்டன.

இந்தப் பொருள்கள் முடிவில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கெட்டியான பூமியானது. இந்த கெட்டியான பூமியின் உட்பகுதியிலுள்ள அதிக வெப்பத்தால் அதன் பகுதிப் பொருள்கள் உருகிய நிலையை அடைந்து அதிலுள்ள சில பொருள்கள் மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டன. இது பூமியின் அடுக்குகளாக உருவாகியது. தற்போது பூமியின் மேல் அடுக்கு குளிர்ந்தும் கெட்டியாகவும் காணப்படுகிறது. ஆனால் பூமியின் மையம் இன்னும் வெப்பமாகவும் திரவ நிலையிலும் இருக்கிறது. இந்நிலை ஏற்படுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயின.

உருகிய நிலையிலுள்ள பூமியின் நடுப்பகுதியிலிருந்து புறத்தோட்டுக்குத் தள்ளப்பட்ட சில பொருள்கள் நீராக உருப்பெற்றன. மற்றவை காற்று மண்டலத்தின் வாயுக்களாக உருப்பெற்றன. இந்த நீர் ஆவியாகி மேகங்கள் தோன்றின. இவை குளிர்ந்து மழை உண்டாக்கியது. இத்தகைய நீரின் சுழற்சியால் தொடர் மழை பொழிந்தது . இதனால் பூமியின் புறத்தோட்டிலுள்ள பள்ளத்தாக்குகள் , வெடிப்புகள் மற்றும் குழிகள் ஆகியவை நிரப்பப்பட்டன. இம்முறையில் ஆறுகளும் ஏரிகளும் பெருங்கடல்களும் சமுத்திரங்களும் உண்டாயின. காலங்காலமாக பூமி மிக அதிக மழையைப் பெற்று அதன் புறத்தோட்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

பூமியின் புறப்பகுதியில் 7 / 10 பகுதி நீரால் சூழப்பட்டும் , 3 / 10 பகுதி நிலமாகவும் இருக்கிறது. பூமியின் காற்றோட்ட மண்டலத்திலும் மிகப் பல மாறுதல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் நிறைந்த தன்மை உருவானது. பூமியின் முதல் ' உயிரி நீர் சூழலில் ( கடலில் ) தோன்றியதற்கான சான்றுகள் உள்ளன. பிறகு உயிரிகள் பரிணாமம் அடைந்து பரிணாம மரத்தின் உச்சிக் கிளையின் வல்லமை பெற்ற கனியாக மனிதன் இருக்கிறான்.

ஆக , நமது தொன்மையான மூதாதையரின் பிறப்பிடம் கடல்தான். அதனால்தான் என்னவோ கடற்கரைக்குச் சென்றால் நமக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பிறந்த இடத்திற்கு வந்துவிட்டது போலவும் , அதிக நாள் பிரிந்த சொந்தங்களைப் பபது போலவும் நம் மனதிற்குள் மகிழ்ச்சிக் கடல் பொங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி