என்ஜினீயரிங் கலந்தாய்வு, கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது? என்பது குறித்து அதிகாரிகளுடன் உயர்கல்வி துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்வித்துறை அதிகாரிகளுடன் திடீரென்று நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கூடுதல் செயலாளர் லில்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவற்றில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, சமீபத்தில் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் செமஸ்டர் தேர்வு குறித்து எடுக்கப்பட்ட சில முடிவுகளையும் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.மேலும் என்ஜினீயரிங் கலந்தாய்வு, கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆகியவற்றை எப்போது நடத்தலாம்? இப்போது இருக்கும் அசாதாரண சூழ்நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது எப்படி? என்பது குறித்தும் அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். எப்போது நடத்தலாம்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. சிலவற்றை குறித்து ஆய்வு செய்த பின்னர், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கண்டிப்பாக தேர்வுக்கு முன்கூட்டியே நேரம் ஒதுக்கப்பட்ட பின்னர் தான் நடத்தப்படும். தற்போது சில கல்லூரிகள் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை தற்போது இருக்கிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்துவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு உள்பட அனைத்து பணிகளிலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு வழங்குவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை கேட்டு இருந்தது. ஆனால் அரசு இதுவரை வழங்கவில்லை. ஒப்புதல் கடிதத்தை இம்மாத இறுதிக்குள் வழங்க மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், அதுதொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி