மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - அவசரச் சட்டம் வருகிறதா? - kalviseithi

Jun 10, 2020

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - அவசரச் சட்டம் வருகிறதா?


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இடஒதுக்கீடு பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இந்த குழுவில், சுகாதாரத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்,உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெறுவதற்கான கூட்டங்களை நடத்தியது.இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்பித்தது.அதில், அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி கிடைக்காதது, பெற்றோரின் கல்வித் தரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 66 விழுக்காடு மாணவர்கள் ஒரு முறைக்கு அதிகமாக நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதையும் கலையரசன் குழு சுட்டிக்காட்டியுள்ளது,இதனடிப்படையில், நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு கோட்டா, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கலையரசன் குழு பரிந்துரையை அரசு ஏற்கும் நிலையில், நீட் தேர்வுக்கு முன்பாக, தனி இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 % இடஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் உள்ள ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 600 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நீட் தேர்வை சுமார் 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர்.

1 comment:

  1. அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அவசியம். 6 முதல் 12 வரை அல்லது 8 முதல் 12 வரை, அரசு / அரசு உதவி பெறும் பள்ளியில்
    படித்திருத்தால் உள் ஒதுக்கீடு MBBS ல் அவசியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி