ராணுவம் குவிப்பு; எல்லையில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க முடிவு: மத்திய அரசு முழு அதிகாரம் அளித்துள்ளதாகத் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2020

ராணுவம் குவிப்பு; எல்லையில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க முடிவு: மத்திய அரசு முழு அதிகாரம் அளித்துள்ளதாகத் தகவல்!


எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கும், ஆவேசமான போக்கிற்கும் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழுமையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால், 3,500 கி.மீ. எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

"கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது" என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.

மேலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளக்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் எந்தப் பகுதியையும், எந்த எல்லையையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாக்க ராணுவம் எந்த நேரத்திலும் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைத் தளபதிகளான ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, கப்பற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ் பகதூரியா, தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறல், ஆவேசமான போக்கிற்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவின் நில எல்லைப் பகுதிகளிலும், வான்வெளி மற்றும் கடற்பகுதிகளிலும் சீனாவின் ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீன ராணுவம் எந்தவிதமான அத்துமீறலில் ஈடுபட்டாலும் தகுந்த பதிலடி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஆவேசமான நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் தரைப்படையும், விமானப்படையும் இதற்கான முயற்சியில் தீவிரமாகத் தயாராகி வருகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல், ஆவேசமான போக்கை முறியடிக்கவும், தகுந்த பதிலடி தரவும் ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரத்தை அரசு வழங்கியுள்ளது. சூழலை திறமையாகக் கையாளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சூழலின் தேவைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க ஆர்ஓசி விதிகளிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

1 comment:

  1. பயனுள்ள நல்ல தகவல் பதிவுகளை வரவேற்கிறேன். நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி