வகுப்புக்கு வந்தாலும் ஆப்சென்ட்: 100% தேர்ச்சிக்காக பள்ளியின் இரக்கமற்ற செயல் - 10-ம் வகுப்பில் 5 பேர் மட்டும் தோல்வியடைந்த சோகம்! - kalviseithi

Aug 19, 2020

வகுப்புக்கு வந்தாலும் ஆப்சென்ட்: 100% தேர்ச்சிக்காக பள்ளியின் இரக்கமற்ற செயல் - 10-ம் வகுப்பில் 5 பேர் மட்டும் தோல்வியடைந்த சோகம்!

 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு செல்ல தயாராகி விட்டனர். ஆனால், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் பத்தாம் வகுப்பை கடக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கொரோனாவுக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வந்த நிலையில், வாடிப்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஒரு மாணவி உட்பட 5 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பெற்றோ,ர் மாணவர்களிடம் விசாரித்த போது, சுமாராக படிக்கும் 5 பேரை தனியாக பிரித்து, தினமும் பள்ளிக்கு வந்தாலும் வகுப்பறையில் அமர வைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், 5 பேருக்கும் நாள்தோறும் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பள்ளி உதவி தலைமையாசிரியரான அருளப்பரிடம் முறையிட்டபோது, தங்கள் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் அவர்களை அடுத்தாண்டு தயார் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆனாலும், தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தனர். இந்த சூழலில், தற்போது வெளியான மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் ஆப்சென்ட் போட்டு தேர்வுக்கு பரிந்துரை செய்யாத ஐந்து மாணவர்கள் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது முதல்வரின் தனிப்பிரிவிலும், முதன்மை கல்வி அலுவலரிடமும் பெற்றோர் புகார் அளித்தனர்.


மேலும், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, புகார் ரசிதும் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் பஞ்சாயத்து பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்ற போது, அவர்கள் தரப்பில் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி