அனைத்து அரியர்தேர்விலும் ஆல்பாஸ்!கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட் - kalviseithi

Aug 27, 2020

அனைத்து அரியர்தேர்விலும் ஆல்பாஸ்!கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்


பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து 'அரியர்' பாட தேர்வுகளிலும் 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து 

கட்டணம் செலுத்திய அனைவருக்கும் 'ஜாக்பாட்' பரிசு கிடைத்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலை மற்றும் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டது.இதைப் பின்பற்றி தமிழகத்திலும் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

நலன் கருதி


இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு உண்டு என ஜூலை 23ல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 'அரியர்' பாடங்களை மீண்டும் எழுதவிருந்த மாணவர்களுக்கும் தற்போது 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசால் உயர்மட்டக் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் பரிந்துரைப்படி பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவற்றின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கலை மற்றும் அறிவியலில் இளநிலை படிப்பு பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பு ஆகியவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்; இன்ஜினியரிங்கில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


கோரிக்கை


முதுநிலையில் கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள்; எம்.சி.ஏ. படிப்பில் இரண்டாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஆகியோருக்கும் செமஸ்டர் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பிற செமஸ்டர் தேர்வுகளுக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.அதாவது இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற செமஸ்டர் பாடங்களின் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுகுறித்து விரிவான அரசாணையை உயர் கல்வி துறை வெளியிடும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


அறிவிப்பு


இந்த அறிவிப்பின் வழியாக இறுதி செமஸ்டர் தேர்வை தவிர நிலுவையில் உள்ள மற்ற அரியர் பாட தேர்வுகளை ஏப்ரல் மே மாத செமஸ்டரில் எழுத விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தியிருந்தால் அவர்களுக்கு 'ஆல் பாஸ்' தேர்ச்சி கிடைக்கும்.தமிழக அரசின் அறிவிப்பால் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பல ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பல ஆண்டுகளாக அரியர் வைத்திருந்து இந்த ஏப்ரல் மற்றும் மே மாத தேர்வுகளில் பங்கேற்கலாம் என காத்திருந்த மாணவர்களுக்கும் முதல்வரின் அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


யார் யார் பாஸ் : அமைச்சர் விளக்கம்


'அரியர்' பாடங்களில் யார் யார் தேர்ச்சி பெறுவர் என்பது குறித்து உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார். அவர் அளித்த பேட்டி: எத்தனை ஆண்டுகளுக்கு முன் அரியர் வைத்திருந்தாலும் அவர்கள் செமஸ்டர் ரத்து செய்யப்பட்ட காலத்தில் அந்த தேர்வு எழுத விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணத்தை செலுத்தியிருந்தால் அவர்கள் தேர்ச்சி செய்யப்

படுவர். அவர்கள் இந்த முறை அரியர் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என நினைத்து விண்ணப்பித்திருந்தால் அவர்கள் தேர்வுக்கு தயாராக உள்ளனர் என்பது பொருளாகும். எனவே அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர்.தேர்வுக்கே விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை என்று அர்த்தம். அதனால் அவர்களுக்கு தேர்ச்சி கிடைக்காது, என்றார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி