D.TEd - தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2020-2021 அறிவிக்கை! - kalviseithi

Aug 14, 2020

D.TEd - தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2020-2021 அறிவிக்கை!

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2020-2021 அறிவிக்கை :


 1. 2020-2021 ஆம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


2. விண்ணப்பங்கள் இணையதளத்தில் www.tnscert.org என்ற முகவரியில் 17.08.2020 காலை 10.00 மணி முதல் 28.08.2020 மாலை 5.00 மணி வரை வெளியிடப்படவுள்ளது. இவ்விணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம் . கட்டணம் செலுத்துவதற்குத் தங்களது பற்று அட்டை ( Debit Card ) , கடன் அட்டை ( Credit Card ) மற்றும் இணைய வங்கிச் சேவை ( Internet Banking ) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு | பிற்படுத்தப்பட்ட வகுப்பு | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ .500 / - , மாற்றுத் திறனாளிகள் / தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ .250 / - நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை Online மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ( DIET ) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் . மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து , அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு ( Save ) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும் . இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய முழுமையான விவரங்கள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி வழங்கும் அரசு நிறுவன விவரங்கள் விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பக் கையேட்டினை சொடுக்கி ( Click ) பார்த்துக் கொள்ளலாம்.


3. கல்வித் தகுதி 


i. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் ( Higher Secondary ) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும் . மேலும் , பொதுப் பிரிவினர் ( OC ) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200-300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் ( BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு ( 540 / 1200-270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும் . 


ii . விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு ( தமிழ் / ஆங்கிலம் | தெலுங்கு / உருது ) விண்ணப்பிக்கின்றாரோ , அம்மொழியினை +2 வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும்.


4. வயது வரம்பு : 

31.07.2020 அன்று அதிகபட்ச வயது 30 - க்கு மிகாமல் இருக்க வேண்டும் . ஆதிதிராவிடர் , ஆதிதிராவிட அருந்ததியர் , பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும் . ஆதரவற்றோர் ( Orphans ) , கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும் . கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது | பிற்படுத்தப்பட்டோர் | மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2020 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் கலப்புத் திருமணத் தம்பதியினரில் ஆதி திராவிடர் , ஆதிதிராவிட அருந்ததியர் , பழங்குடியினத்தவருக்கு 31.07.2020 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.


5. சிறப்பு இட ஒதுக்கீடு : மாற்றுத் திறனாளிகள் , முன்னாள் படைவீரரின் குழந்தைகள் , சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது . இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.


6. விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டிய கடைசி நாள் : விண்ணப்பத்தினை www.tnscert.org என்ற இணையதளத்தில் 28.08.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


7. உதவி பெறும் மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை விவரம் : நிதி உதவி / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரியில் Online வாயிலாக தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் . நிதி உதவி | சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி www.tnscert.org -ல் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. வேலை இல்லை படிப்பு எதற்கு?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி