தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2020

தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்.!


தேசிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜூலை 26ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தற்போது தேசியக் கல்விக் கொள்கை இறுதி வடிவம் பெற்றுள்ளது. அதில் பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, 3-5 வயது குழந்தைகளுக்கு முன் தொடக்கக் கல்வி கொண்டுவரப்படுகிறது. 5ம் வகுப்புவரை தாய்மொழி வழிக்கல்வி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


அனைத்து மாணவர்களும் தொழிற்கல்வியைக் கற்க வேண்டும் என்பது கட்டாயம். பாடப் புத்தகங்களைப் படித்து எழுதப்படும் தேர்வுக்கான மதிப்பெண்களுடன், ஒவ்வொரு மாணவரின் தொழில் திறமைகள் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும். `மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும்’ என்பது இதில் ஆறுதல் அளிக்கும் அம்சம். 10ம் வகுப்பு, ப்ளஸ் 2 என்ற முறைக்கு பதிலாக, 9ம் வகுப்பு தொடங்கி 12ம் வகுப்புவரை செமஸ்டர் முறை கொண்டுவரப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்கள் வீதம் எட்டு செமஸ்டர்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல் உயர் கல்வியிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.


 பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ) ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக ‘இந்திய உயர் கல்வி ஆணையம்’ என்கிற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. பி.ஏ., பி,எஸ்சி., பி.காம் போன்ற மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு இனி கிடையாது. இவற்றுக்கு பதிலாக நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு பல அம்சங்கள் கொண்ட தேசிய கல்விக்கொள்ளை குறித்து பல்வேறு விமர்சனங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி உள்ளிட்ட 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


இதனையடுத்து தேசிய கல்விக்கொள்கையில் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த குழுவானது ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது. மேலும் தேசிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் எப்போது நடைமுறைக்கு கொண்டு வருவது ? குறித்தும் இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேசியக் கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக மற்றொரு குழு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி