கவனம் : இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு! - kalviseithi

Apr 30, 2021

கவனம் : இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு!

 


இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது இந்தியா. தினசரி பாதிப்பு லட்சத்தை தாண்டி நிற்கிறது. குறிப்பாக டெல்லி, அசாம், மகாராஷ்டிரா, ஜம்மு, பீகார், குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், நோயாளிகளை அனுமதிக்க இடங்கள் இல்லாததாலும் வீதிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை தொடர்கிறது.


அதே நேரத்தில் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் இரவு-பகலாக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது என்ன செய்வதென்றே தெரியாமல் உறவினர்கள் கண்ணீர்மல்க திகைக்கின்றனர். எந்த ஒரு இயற்கை பேரிடரையும் சுயமாக சமாளித்துமீண்டு வந்த இந்தியா, தற்போது, மருத்துவ உதவி கோரி அயல்நாடுகளில் கையேந்தும் நிலைக்கு கொரோனா தள்ளிவிட்டது. வடமாநிலங்களில் நடந்து வரும் துயர சம்பவத்தை போன்று தமிழகத்திலும் நடந்து விடுமோ என பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் வடசென்னையில் ராயபுரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், அத்திப்பட்டு வியாசர்பாடி அரக்கோணம், திருத்தணி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனாவின் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வரப்போகும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்று பாதித்துள்ள 13% பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையில் கூடுதலாக 3,000 ஆக்சிஜன் படுக்கைகள் அடுத்த 10 நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். டிஎம்எஸ் கொரோனா மையம் மூலம் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை தரம் குறித்து கண்காணிக்கப்படும்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர்; உயிரிழப்புகளை  முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த இயலாது. தேவையான தடுப்பூசிகள் இன்னும் வராததால் 18+ தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி