மாநில நல்லாசிரியர் விருதில் இணையவழிக்கல்வி கட்டாயத் தகுதி என்பது அநீதியே! - kalviseithi

Aug 5, 2021

மாநில நல்லாசிரியர் விருதில் இணையவழிக்கல்வி கட்டாயத் தகுதி என்பது அநீதியே!

 

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருது இந்த முறை அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஐந்து ஆண்டுகள் கல்விப் பணிக்காலம் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாத 385 ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் இவ்விருதுக்கான தேர்வு முறைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதை எளிதாகப் புறந்தள்ளி விட முடியாது. ஏனைய விருதுகளைக் காட்டிலும் பரிசுத்தொகை மிகவும் குறைவு. மேலும் விருதாளர்களுக்கு வேறெந்த சலுகைகளும் கிடையாது. குறிப்பாக, விருதாளர்களே தம்மை முன்மொழிந்து, கோரப்படும் தக்க தரவுகளைக் சேகரித்து, கல்வி உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் நற்சான்று மூலமாக மாநில அளவில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதை வேண்டி பெறும் அவலம் ஏற்புடையதல்ல.

இந்த சூழ்நிலையில், அண்மைக்காலமாக பல்வேறு தனியார் சேவை அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் தகுதி இருந்தும் உரிய விருதோ, அங்கீகாரமோ கிடைக்கப் பெறாத நல்ல நபர்களைத் தேர்ந்தெடுத்து தக்க விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருவது மலிந்துள்ளன. விருதுக்கும் புகழுக்கும் ஏங்கித் தவிக்கும் நபர்களிடம் ஏதேனும் ஒரு பெயரில் விருதுகள் விற்பதைத் தொழிலாகக் கொண்ட நவீன வணிக கும்பலும் சமூகத்தில் தற்போது பெருகி வருகின்றனர். இதன் காரணமாக, பலரும் சமுதாயத்தில் தம்மை ஏதாவது ஒரு வகையில் உகந்த வழிகளில் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டு கொள்ளுவின் பின்னே ஓடும் குதிரையைப் போல் ஆசிரியப் பேரினம் விருதுகளின் பின்னால் ஓடத் தொடங்கியுள்ளது வேதனையானது.

சமூக ஊடகங்களின் பெருவெடிப்பிற்கு பிறகு, நடப்பில் ஒரு சிறு அங்கீகாரத்திற்காக ஒவ்வொருவரும் தம்மை சமூகத்தின் ஆகச் சிறந்த ஆளாகக் காட்டிக் கொள்ள அரும்பாடுபட்டு வருவது கண்கூடு. பத்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகள் சமுதாயத்தில் இல்லை. ஆனாலும், அக்காலத்தில் பணிபுரிந்தோர் அதிசயங்கள் புரியாமலில்லை. கணினியை ஆட்சி செய்யும் அளவிற்கு சூட்சுமம் பழகாமல் போனாலும் ஒவ்வொரு மாணவ உள்ளங்களிலும் வாமன உருவெடுத்து ஆட்சி புரிவதை மறுப்பதற்கில்லை.

இத்தகு சூழலில், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இணைய வழியிலும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் கட்டாயம் கற்பித்த ஆசிரியர்கள் மட்டுமே மாநில நல்லாசிரியர் விருது பெறத் தகுதியுடையவர் ஆவார்கள் என்பது சரியல்ல. இந்த புதிய உள்நோக்கம் கொண்ட அரசின் அறிவிப்பால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாணவர், பள்ளி மற்றும் சமுதாய நலன்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த தகுதியான ஆசிரியர்கள் பலர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இணையவழிக் கல்வியை இனிதே கற்கும் நல்ல சூழலும் உகந்த உபகரணங்களும் அதற்கான வசதிகளும் இல்லாதது யாவரும் அறிந்ததே.

இதுபோன்ற மாணவ சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு வகுப்பில் நோய்த்தொற்று பாதுகாப்பு வழிமுறைகளோடு பாடம் கற்பித்த சிவகங்கை மாவட்ட ஆசிரியைகளுக்குக் கிடைத்தது பாராட்டுக்கள் அல்ல. தண்டனையே! ஆனாலும், பல்வேறு இருபால் ஆசிரியர்களும் தம் வகுப்பறைகள் கற்பித்தல் பணிக்கு மாற்றாக அன்னபூரணிகளாக, நாட்டு வைத்தியர்களாக, இணையவழிப் பயிற்றுநர்களாக, தனிவகுப்பு எடுக்கும் தன்னார்வலர்களாக அரிதாரம் பூசிக்கொண்டது தனிக்கதை. 

எல்லோரிடத்திலும் ஏதேனும் ஒரு வகையில் உரிய, உகந்த, உன்னத உழைப்பு காணக் கிடைக்கிறது. மாணவர்கள் அற்ற பள்ளிகளில் வந்து போகும் நடைபிணங்களாக ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை யாரும் அறியார். குறிப்பாக, ஏழை, எளிய, விளிம்பு நிலையில் வாழும் தொடக்கக்கல்வி படிக்கும் பிள்ளைகளிடம் தொடுபேசி என்பது இன்றளவும் பெரிய நிறைவேறாத கனவாகவே உள்ளது. தொலைக்காட்சி வழிக்கல்வியும் 6-14 வயதுப்பிள்ளைகளைக் கவராத தோல்வியுற்ற நிலையிலேயே இருப்பதுதான் நடப்பாகும்.

ஆகவே, தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கற்பித்தலை நிகழ்த்துவோருக்கு கடந்த ஆட்சியில் அறிவித்து நடைமுறைப்படுத்திய கனவு ஆசிரியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்துவது அவசர அவசியமாகும். அதைவிடுத்து, மாநில அரசு வழங்கும் இராதாகிருஷ்ணன் விருதில் இச்சிறப்பியல்பை ஓர் அளவீடாகக் கருதலாமேயொழிய அதையே ஆகச் சிறந்த தகுதியாகக் கட்டாயமாக நிர்ணயிப்பது என்பது முற்றிலும் தவறான நடைமுறையாகும். ஏனெனில், இணைய வழிக்கல்வி மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொண்ட ஆசிரியர்கள் பலரும் சுய வலைதளம் மற்றும் வலைக்காட்சி மூலமாக நூதனமாகப் பணம் ஈட்டும் முயற்சிகளிலும் மறைமுகமாக ஈடுபட்டு வருவது சிந்திக்கத்தக்கது. இதுகுறித்து ஆசிரியர் இயக்கங்கள் உடனடியாக பள்ளிக்கல்வித்துறை கவனத்திற்கு எடுத்துச் சென்று நியாயத்தை நிலைநாட்டி எல்லாவகையிலும் தலைசிறந்த தகுதியான ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருது கிடைத்திட ஆவன செய்வது அவசியம்.

எழுத்தாளர் மணி கணேசன்

2 comments:

  1. Very excellent..For real teaching learning activities,ict is not compulsory.... Some corporate companies are pushing to do so...

    ReplyDelete
  2. அதில் சொல்லும் கருத்து மிகவும்
    உண்மையே.கஷ்டப்பட்டு உழைக்கும்
    ஆசிரியருக்கு மதிப்பே இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி