கொரோனா : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000; யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது? - kalviseithi

Sep 30, 2021

கொரோனா : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000; யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது?

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இனிவரும் காலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம் என்று தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த இழப்பீடு தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்... எப்படி வாங்குவது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.


உச்ச நீதிமன்றம்


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஜூன் 30-ம் தேதி வழக்கு விசாரணையின்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அடுத்த ஆறு வாரங்களுக்குள் பரிந்துரை செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணம் குறித்த தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பரிந்துரையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


யாருக்கெல்லாம் நிவாரணம்?


அந்தப் பரிந்துரையின்படி, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கொரோனா சிகிச்சைப் பணி, தடுப்புப் பணி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.


கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலங்களில் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் மறு அறிவிப்பு வரும்வரை கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.


கொரோனா சிகிச்சை


கொரோனா பணிக்குச் சேர்க்கப்பட்ட செவிலியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே நிவாரணத்தொகை செலுத்தப்பட வேண்டும்.


கொரோனா தொற்று உறுதியான அல்லது கொரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட 30 நாள்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவராகக் கருதப்படுவார்கள். மேலும், 30 நாள்களுக்குப் பிறகும் சிகிச்சையிலிருந்து உயிரிழப்பவர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களாகக் கணக்கிடப்படுவர்.


ஒருவேளை, ஒருவர் 30 நாள்களுக்கும் மேலாக கொரோனா சிகிச்சையிலிருக்கும்போது இறந்துவிட அவரது டெஸ்ட் ரிசல்ட்டில் கொரோனா நெகட்டிவ் என கூறப்பட்டு இறப்புச் சான்றிதழிலும் கொரோனா நெகட்டிவ் எனக் குறிப்பிடப்பட்டு, கொரோனாவால் இறக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும் மேற்சொன்ன விளக்கப்படி அவர்களும் நிவாரணம் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


நிவாரணத்தை எப்படிப் பெறுவது?


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறப்புச் சான்றிதழ் உட்பட தேவையான ஆவணங்களோடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நிவாரணம் வழங்கும் பணியை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்.


மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்று சான்றிதழ் வாங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அந்தச் சிக்கலைத் தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பிரத்யேகக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், கூடுதல் மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் (மருத்துவக் கல்லூரி இருக்கும் மாவட்டத்தில் மட்டும்) மேலும் ஒரு துறை சார் நிபுணர் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் முறையிடலாம். ஒருவேளை இந்தக் குழு அந்த குடுப்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்குவதை மாறுபட்டால், அதற்கான காரணம் தெளிவுபடக் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பரிந்துரைக்கு முன்னதாகவே, கொரோனா பாதிப்பிலிருந்தவர்களின் குடும்பங்களுக்கு பீகாரில் 4 லட்சம் ரூபாய், கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் 1 லட்சம் ரூபாய், திரிபுராவில் 10 லட்சம் ரூபாய் (மூன்று தவணைகளில்), ஹரியானாவில் 2 லட்சம் ரூபாய் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு). டெல்லியில் 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தையின் வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாயும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தையின் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்படும். தமிழகத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தையின் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாயும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தையின் வங்கிக் கணக்கில் 3 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.


கொரோனா மரணம்


இந்தியா முழுவதும் 24 செப்டம்பர் நிலவரப்படி, 33,594,803 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,848,273 நபர்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இவர்களில் 4,46,399 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,725 நபர்களும், கர்நாடகாவில் 37,683 நபர்களும், தமிழகத்தில் 35,427 நபர்களும் உயிரிழந்துள்ளார்கள். இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க மொத்தம் 2,250 கோடி வரை செலவாகவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிவாரணம் வழங்க அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு 693 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 188 கோடி ரூபாயும், தமிழகத்துக்கு 176 கோடி ரூபாயும் செலவாகும்.


கொரோனா மரணம்


மாநில அரசுகள் கொரோனா தடுப்புப் பணிகள் முதல் மற்ற பேரிடர் பணிகளை வரை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்துதான் பயன்படுத்திவருகின்றன. இந்த நிவாரணத் தொகையையும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொடுக்கப்பட்டால் அது மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையாக இருக்கும். எனவே, மத்திய அரசு கூடுதல் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே சமயத்தில், மாநில தேசிய பேரிடர் மேலாண்மை நிதியைப் பொறுத்தவரை, அந்த மொத்த நிதியில் பெருந்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி