நாளை முதல்! அனைத்து பள்ளிகளிலும் முழு அட்டெண்டன்ஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2022

நாளை முதல்! அனைத்து பள்ளிகளிலும் முழு அட்டெண்டன்ஸ்

 

தமிழகத்தில், 40 நாட்கள் விடுமுறைக்கு பின், நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழு 'அட்டெண்டன்ஸ்' பதிவாகும் வகையில், 100 சதவீதம் மாணவர்களை நேரடியாக வர வைத்து, பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவர்கள், ஊரடங்கு நீங்கியதால், பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகத்தை பொறுத்து, அவ்வப்போது ஊரடங்கு விதிகளை அதிகரிப்பதும், தளர்த்துவதுமாக அரசு உத்தரவிட்டு வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, இம்மாதம் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை, இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலாகின்றன. இது குறித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு


இந்நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை சுழற்சி முறை என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் வகுப்பு நடத்தலாம் என்றும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளன.கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தது போல, தற்போதும் பள்ளிக்கு 100 சதவீத மாணவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


அதே நேரம், பள்ளிகளில் கொரோனா தொற்று தடுப்புக்கான நிலையான வழிகாட்டு முறைகளை கட்டாயம் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்கள் நலன் கருதி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து வகை பள்ளிகளிலும், பிப்., 1 முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 


இதில், 100 சதவீத வருகையுடன், அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாம். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உற்சாகம்


இந்த உத்தரவை தொடர்ந்து, அனைத்து பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உற்சாகம் அடைந்துள்ளனர். வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவர்களும், பள்ளிக்கு செல்ல உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டில், செப்., 1ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மட்டும் நேரடி வகுப்புகள் நடந்தன. அதன்பின், நவ., 1 முதல், ஒன்று முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. டிச., 24 முதல் அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது. 


மீண்டும் ஜன., 3ல் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஒமைக்ரான் பரவலால் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே, 'இந்த கல்வி ஆண்டில் மீதமுள்ள மூன்று மாதங்களாவது பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே, மாணவர்களின் அடிப்படை கல்விக்கான, குறைந்தபட்ச முக்கிய பாடங்களை நடத்த முடியும்' என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகவும், ஜே.இ.இ., 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும், தேவையான பாடங்களை நடத்தி முடிக்கவும், திருப்புதல் தேர்வுகளை நடத்தவும் பள்ளிகள் தயாராகின்றன.அதே நேரம், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் மழலையர் பள்ளிகளான, 'பிளே ஸ்கூல்'கள் திறக்க, அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி