10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்த அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2022

10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்த அறிவுரை

 நாளை மறுநாள் துவங்க உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 திருப்புதல் தேர்வை, பொதுத்தேர்வு போல உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக, சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வழி வகுப்புகளே நடந்தன. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில், இரண்டு ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. 


இந்நிலையில், பிப்.,1ல் இருந்து, ஒன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு ஜனவரியில் அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு, நாளை மறுநாள் மீண்டும் துவங்க உள்ளது. இதற்காக, பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.பள்ளி கல்வித்துறை நடத்தும் திருப்புதல் தேர்வுக்கு, முதல் முறையாக, அரசு தேர்வு துறை வழியே, மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது. 


இந்த தேர்வை, தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ; அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல நடத்துவது சரிதான். அதற்காக பொதுத்தேர்வை தேர்வை ஒரு தேர்வும் இல்லாத புரட்சித் தேர்வாக அறிவிக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  2. தினமும் வினாத்தாள் வாங்க
    விடைத்தாள் ஒப்படைக்க தொலைவில் உள்ள மாவட்ட எல்லையில் பள்ளிக்கு அதிக செலவுகள் ஆகும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி