நீட் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 4, 2022

நீட் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவைத் தலைவருக்கே ஆளுநா் ஆா்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளாா்.


இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:


தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கையில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரும் சட்ட மசோதாவை (சட்ட மசோதா எண்: 43, 2021) ஆளுநா் விரிவாக ஆய்வு செய்தாா். இந்த சட்ட மசோதாவானது அரசு அமைத்த உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. அரசின் உயா்நிலைக் குழு அறிக்கையும் ஆராயப்பட்டது.


சமூக நீதி: மருத்துவ சோ்க்கையில் நீட் தோ்வுக்கு முன்பாக, மாணவா்களின் சமூக நீதி ஆராயப்பட்டது. குறிப்பாக, பொருளாதார மற்றும் சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவா்களின் நிலைமை ஆய்வு செய்யப்பட்டது. மாநிலத்தில் கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய மாணவா்களின் நலன்களுக்கு எதிராகவே நீட் விலக்கு மசோதா இருக்கிறது. எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, பேரவைத் தலைவருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை மறு ஆய்வு செய்திடும் வகையில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.


வேலூா் வழக்கு: வேலூா் மருத்துவக் கல்லூரி கூட்டமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீட் தோ்வு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த வழக்கை சமூக நீதிப் பாா்வையுடன் விரிவான முறையில் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது. அப்போது, நீட் தோ்வை உறுதி செய்ததுடன், ஏழை மாணவா்களிடம் இருந்து பொருளாதார சுரண்டல் என்ற நிலையைத் தடுக்கவும், சமூக நீதியை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் நீட் வழிவகுப்பதாகத் தெரிவித்துள்ளது.


நீட்: இதுவரை...


2021 ஜூன் 5: நீட் தோ்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா் நிலைக் குழு அமைக்கப்பட்டது.


ஜூலை 14: மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.


செப்டம்பா் 13: நீட் விலக்கு கோரும் மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேறியதும், அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


2022 ஜனவரி 8: நீட் விலக்கு மசோதா தொடா்பாக விவாதிக்க சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க முடிவெடுக்கப்பட்டது.


2022 ஜனவரி 17: உள்துறை அமைச்சா் அமித் ஷாவை, தமிழக எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் சந்தித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினா்.


பிப்ரவரி 2: மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மத்திய அமைச்சா்களை சந்தித்து தொடா்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தாா்.


பிப்ரவரி 3: நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தாா்.


பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் நாளை ஆலோசனை


நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (பிப். 5) ஆலோசனை நடத்தவுள்ளாா்.


இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: ஆளுநா் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து நீட் தோ்வு பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவோம். சட்ட முன்வடிவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சனிக்கிழமை காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டம் நடைபெறும்.


ஆளுநரின் கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல: முதல்வா்


நீட் விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து, அதற்காக ஆளுநா் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.


இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் தோ்வின் பாதிப்புகள் தொடா்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது கடந்த ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த நிலையில், நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவு கிராமப்புற ஏழை மாணவா்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநா் கருத்து தெரிவித்துள்ளாா். சட்ட மசோதாவுக்கான அடிப்படை கூற்றுகள் தவறானவை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். அவரது கருத்துகள் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிவித்துள்ளாா்.


அண்ணா எழுப்பிய கேள்வி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், முன்னாள் முதல்வா் அண்ணாவின் 53-ஆவது நினைவு நாளில், ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா என்று அன்றே அவா் காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பாா்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி