கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 18, 2022

கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு எத்தகையதோ அதைவிடச் சற்று கூடுதலான எதிர்பார்ப்போடே தி.மு.க-வின் ஆட்சிப் பொறுப்பை எதிர்பார்த்திருந்தனர் பெரும்பான்மை ஆசிரியர்கள். இந்த எதிர்பார்ப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது தி.மு.க-வின் கடந்த கால செயல்பாடுகள் என்பதைவிட அ.இ.அ.தி.மு.க-வின் இறுதி 3 ஆண்டு காலத்திய செயல்பாடுகளே என்பதுதான் சரியாக இருக்கும். 19 ஆண்டுகால ஓய்வூதியக் கோரிக்கையையும், 13 ஆண்டுகால இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கையையும் மறுத்ததோடே, ஏளனமான - எகத்தாளமான - திமிரான பேச்சுகள் & பொய்யான அறிக்கைகளின் வழி வெந்த புண்ணில் திராவகத்தை உமிழ்ந்தனர் அ.இ.அ.தி.மு.க ஆட்சியாளர்கள். அதன் விளைவு, மாநில நலனோடே தனிப்பட்ட முறையிலும் விடியல் வேண்டி தி.மு.க-வை எதிர்பார்த்திருந்தனர் ஆசிரியர்கள்.


தமது எதிர்பார்ப்புகளை தமது & தமது குடும்ப - உறவினர் வாக்குகளின் வழி தேர்தலில் எதிரொலிக்க வைத்தனர். அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்றபின், இன்று  தி.மு.க ஆட்சி பொதுவாக எப்படி உள்ளது என்று ஆசிரியர்களிடம் கேட்டால் பெரும்பான்மையினர் நல்லபடியா உள்ளதென்றே கூறுவர். அதே நபர்களிடம் கல்வித்துறை எப்படி உள்ளது என்று கேட்டால் 99.9% ஆசிரியர்களின் பதில், "இதுக்கு அதிமுக ஆட்சியே தேவலைங்க" என்பதாகத்தான் இருக்கும்.


இந்த பதிலுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினால் அது OTT தொடர் போல நீண்டுவிடும். சுருக்கமாகக் கூறினால், திமுக வெளிப்படையாக எதிர்த்த புதிய கல்விக் கொள்கையின் உட்கூறுகளைப் பிரித்துப்பிரித்து நடைமுறைப்படுத்துதலையும், மாணவர்களிடம் ஆசிரியர்கள் மன நிறைவோடே பாடங்களைக் கற்பிக்கவிடாதபடியான கல்வித்துறையின் அடுத்தடுத்த அறிவிப்புகளையும், முன்பு இருந்த கட்டமைப்பை அதிநவீனப்படுத்துதல் எனும் பேரில் ஒவ்வொரு வாரமும் பலவிதமான தரவுத் தொகுப்புகளை Online-ல் ஏற்ற அறிவிப்பு வெளியிடுதலையும், 'பயிற்சி' என்பதன் பொருளையும் நோக்கத்தையும் 100% சுக்குநூறாகச் சிதைத்துப்போட்ட Online Training-குகளையும் குறிப்பிட்டுக் கூறலாம். 


மேலும், ஒன்றரை ஆண்டுகள் பள்ளிச் சூழலில் இல்லாத மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உய்த்துணர்ந்து கற்பிக்க வேண்டுமென கால அட்டவணையெல்லாம் வெளியிட்டுவிட்டு, பள்ளி திறந்த ஒரே வாரத்திற்குள் மாணவர்களிடம் கற்றல் அடைவே இல்லையென ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டதும், அதனடிப்படையில் கற்றல் அடைவுகள் பயிற்சியை பெருந்தொற்றுக்கால வழிமுறைகளை பெயருக்குக்கூட கடைபிடிக்காமல் பயிற்சி அளித்ததும், அதில் கலந்து கொண்ட பல ஆசிரியர்களுக்கு தொற்று பரவியதும் தொட்டபெட்டா சாதனை என்றால். . . . 10 ஆண்டுகளுக்கும் மேலாக Online வழியே வழக்கமாக நடத்தி வந்த பணியிட மாறுதல் கலந்தாய்வினை ஊருக்கு ஒரு சிக்கல் நாளுக்கு ஒரு குழப்பமென 6 - 7 முறை கால அட்டவணைகளை மாற்றி 2 மாத காலமாக நடத்திக் கொண்டேயிருப்பது எவரெஸ்ட் சாதனை. இப்பணியில் ஈடுபட்டுள்ளோரில் 99% அலுவலர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் Online கலந்தாய்வுகளை நடத்திய அனுபவமிக்கோர் என்பதயும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


19 ஆண்டுகால ஓய்வூதியக் கோரிக்கையும், 13 ஆண்டுகால இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கையும் இன்றும் தீர்ந்தபாடில்லை என்பதோடே இதுபோன்ற அடுக்கடுக்காக அனுதினமும் கூடிக்கொண்டே இருக்கும் குழப்பங்களும், அறிவிப்புகளும், நடைமுறைகளுமே இன்று ஆசிரியர்களை 'இவுகளுக்கு அவுகளே தேவல' என்று எண்ண வைத்துள்ளது.


ஓ. . . அப்ப, அவுக ஆட்சீல ஆசிரியர்கள் மன நிறைவோடே பணியாற்றினரா என்றால் இல்லை. இருந்தும், எழக்கூடிய சிக்கல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆசிரிய இயக்கங்கள் களத்தில் இருந்தன. ஆனால், இன்றைய நிலையோ. . .??? புதிதாகத் தரவேண்டி அல்ல, முன்னர் தந்து வந்த ஊதியம், ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எல்லாம் பறிக்கப்பட்டுள்ள சூழலில் கடந்த ஓராண்டாக அதுகுறித்தும் சங்கங்களிடையே சத்தமில்லை. தற்போது ஓராண்டாக அதிகரித்து வரும் கற்பித்தலைத் தவிர்த்த பணிச்சுமைகள் குறித்தும்  சங்கங்களிடையே  அதிர்வில்லை. அனைத்தும் flight mode-ல் உள்ளன. கிட்டத்தட்ட எவ்வித ஆதரவுமற்ற அகதிகளின் நிலையில் தான் ஆசிரியர்கள் உள்ளனர்.


சரி அந்த சங்கங்கங்களெல்லாம் எங்குதான் போயின??? என்னதான் நிலவரம்???


ஆசிரிய இயக்கங்களைப் பொறுத்தவரை இடதுசாரிகள், திமுக, விசிக, அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளின் (வெளிப்படையான) கொள்கைசார் சங்கங்களாக சில உள்ளன. இப்பட்டியலில் புதிதாக பா.ச்ச.க சங்கமும் இணைந்துள்ளது. இவர்கள் யாவருமே வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்போர். குறிப்பிட்ட விடயத்தில் இவர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்குமென ஓரளவு கணிக்கவும் இயலும். ஆனால், 'அவிங்கெல்லாம் கட்சி சார்பு சங்கம். நாங்கதேன் கட்சியே சாராதவுக' என்று கூறிக்கொண்டு பல சங்கங்கள் உள்ளன. இவை பெயருக்கு அவ்வாறு கூறிக்கொண்டு யார் ஆட்சியில் உள்ளனரோ அவர்களுக்குச் சாதகமாக நடப்பதாக ஆட்சியாளர்களையும் மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டு தனது உறுப்பினர்களையும் ஏமாற்றி வருபவை. யாரேனும் போராட்டத்தை முன்னெடுத்தால் வேறுவழியேயின்றி கூட்டு சேர்ந்து கொண்டு, கோரிக்கை நிறைவேறக்கூடிய உச்சக்கட்ட போராட்டக் காலத்தில் களத்தைவிட்டு வெளியேறி ஆட்சியாளர்களுக்கு தமது விசுவாசத்தைக் காட்டுபவை.


இத்தகைய பலதரப்பட்ட சங்கங்களைக் கொண்ட கல்வித்துறையில், தற்போது நடந்து வரும் குழப்பங்களுக்கு எல்லாம் இவை பெரும்பாலும் எடுத்த உச்சபட்ச ஆயுதம் 'ஒரு அறிக்கை!'. அவ்வளவே. 'முதல்வர் நல்லவர்தேன் ஆனா அதிகாரிக சரியில்லை' என்பதாக அவ்வறிக்கைகள் இருக்கும். இவ்வறிக்கைகளால் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைத்ததா என்றால், 99% இல்லை - இல்லவே இல்லை. இருக்கும் சிக்கல் தீராது புதுப்புது சிக்கல்கள் அடுத்தடுத்துவர ஒருகட்டத்தில் அது ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பாக ஆசிரியர்கள் மத்தியில் இன்று மாறத் தொடங்கியுள்ளது.


இவற்றையெல்லாம் 100% உணர்ந்திருந்தும், சங்கங்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டுமென வெளிப்படையாக எந்தவொரு வலுவான அழுத்தத்தையும் ஆட்சியாளர்களிடம் எழுப்பவேயில்லை என்றுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை சட்டமேலவை அமைக்கப்பட்டால் அந்நற்பெயரை வைத்து MLC ஆக வாய்ப்பு கிட்டலாம் என்ற பெருங்கனவோ? என்னவோ? விளங்கவில்லை. 


மெய்யாகவே இவை முதல்வரிடம் நற்பெயர் பெற என்ன செய்திருக்க வேண்டும்? ஆசிரியர்களின் அதிருப்தியைக் குறைக்க முயன்றிருக்க வேண்டும் அல்லவா? சிக்கல்களுக்கு அதிகாரிகள் காரணமெனில், துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டிருக்க வேண்டாமா? அமைச்சர் ஒருவேளை கடந்து சென்றுவிட்டால் முதல்வரிடம் முறையிட்டிருக்க வேண்டுமல்லவா? அமைச்சரோ முதல்வரோ கடந்த ஆட்சியைப்போல அணுகவே முடியாத உயர் அழுத்த மின்வேலியைத் தங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளவில்லையே!


தாங்கள் ஏற்றுக்கொண்ட வாக்குறுதியாகவே இருந்தாலும் அதை ஆளும் தரப்பு செயல்படுத்த வேண்டுமானால், அவர்களின் கவனத்தை ஈர்க்க தொடர் & முழுமையான அழுத்தங்கள் தரப்பட வேண்டும். ஆனால், சங்கங்கள் இதைச் செய்தனவா? என்றால். . . .இல்லை.


யூ டியூப்பில் வெளிவரும் சிக்கல்களுக்குக் கூட கவனம் செலுத்தும் முதல்வர், தனது ஆட்சியில் தமது அமைச்சரவையின் கீழ் பணியாற்றும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் அனுதினம் தமது துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த மறுத்துவிடுவாரா என்ன. . .! இருந்தும், அவரது நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய சங்கங்கள் யாவும் கூட்டு சேர்ந்து மவுனமாக இருப்பது ஏன்?


ஜாக்டோ-ஜியோ சார்பில் முதல்வரை அழைத்து மாநாடு நடத்துவதாக அறிவித்த அறிவிப்பு என்னவாயிற்று? ஆசிரியர் & அரசு ஊழியர் கூட்டியக்கமான ஜாக்டோ-ஜியோ-வில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்களுக்கான சங்கம் முதல்வரைத் தமது மாநாட்டிற்கு அழைத்து வந்தது. ஆனால், ஆசிரியர்களுக்கான சங்கங்கள்??????


இன்று பெரும் சிக்கலே கல்வித்துறைக்குள்தான் எனும்போது, ஆசிரியர் இயங்கங்கள் தொடர்ந்து மவுனமாகவே இருப்பதன் பின்னணி என்ன??? ஆசிரியர்களின் அனுதினச் சிக்கல்களை உணர முடியாத அளவிற்கு சங்கங்களின் பொறுப்பாளர்கள் எல்லாம் உக்ரேனியப் பதுங்கு குழிகளுக்குள் மாட்டிக் கொள்ளவில்லையே! அவர்களும் சேர்ந்து தானே அச்சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர். இருந்தும் அவை குறித்த தொடர் மவுனங்கள் ஏனோ?


இவ்வாறு மவுனமாக இருப்பதன் வழி நேரடியாக ஆட்சியாளர்களுக்குத் தங்களைச் சாதகமானவர்களாகக் காட்டிக் கொள்வதோடே, ஆசிரியர்களின் அனுதின சிக்கல்களைக் குறைக்க, உண்மையாக முழுமையான முயற்சிகளை எடுக்காமலிருந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியைப் பெருக்குவிக்க வழிவகுத்து அதன்மூலம் தங்களை எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமானவர்களென காட்டிக் கொள்ள சங்கங்களின் பொறுப்பாளர்கள் முடிவு செய்துவிட்டனரோ என்ற ஐயம் கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.


இந்த ஐயத்தை போக்க வேண்டி அல்ல, குறைந்தது தம்மை நம்பியுள்ள உறுப்பினர்களின் உடல் & மன நலனைக் கருத்தில் கொண்டு, தாங்கள் மதிக்கும் ஆளும் தரப்பின் மீதான அதிருப்தியைக் குறைக்கும் நோக்கிலாவது முதல்வரின் நேரடிக் கவனத்திற்குக் கல்வித்துறையின் குழப்பங்களையும், ஊதிய & ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கொண்டுசென்று நிரந்தரத் தீர்வு காண ஆசிரியர் இயக்க பொறுப்பாளர்கள் தமது குளிர்கால உறக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதே தமக்கான பாதிப்புகளை உணர்ந்த ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


பல அலுவலர்கள் / அதிகாரிகளின் எதிர்பார்ப்பும்கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஏனெனில், கலந்தாய்வு குறித்த நடைமுறைகள் பற்றியோ, பயிற்சிகள்  குறித்த அறிவிப்புகள் பற்றியோ துறை ரீதியான உரிய அறிவிப்புகள் வட்டார / மாவட்ட அலுவலர்கள் கவனத்திற்கு ஏற்றகாலத்தில் இதுவரை வெளிவருவதே இல்லை. துறை சார்ந்த பல அறிவிப்புகள் தனியார் Blog / Website-கள் வழிதான் வெளிவருகின்றன. இதனால் மாநிலம் முழுக்கவே ஆசிரியர்கள் அலுவலர்கள் மத்தியில் குழப்பமே மிஞ்சியுள்ளது. கிட்டத்தட்ட தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கும் / வட்டார வளமையத்திற்கும் தொடர்பே இல்லை என்ற நிலையில்தான் உள்ளது. ஓரளவு வாட்சப்பில் Blog-களின் செய்திகளைப் பகிரும் ஆசிரியர்களும் இல்லை எனில், ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் கல்வித்துறைக்கும் தொடர்பே இல்லையென்ற நிலைதான் ஏற்படும்.


ஆசிரியர்களின் எதிர்பார்ப்பின்படி மாநிலத்தைச் சீரமைக்க அரசாங்கமே மாறியது! ஆசிரியர்களின் எதிர்பார்ப்பின்படி, இன்னல்களைப் போக்கவும் ஊதியம் & ஓய்வூதியத்தை மீட்கவும் ஆசிரியர்களின் சந்தாவில் இயங்கும் சங்கங்கள் தம்மை மாற்றிக்கொண்டு களத்திற்கு வருமா?

நன்றி :

✍🏼 திரு. செல்வ.ரஞ்சித் குமார்

12 comments:

 1. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் திமுக ஆட்சிக்கு வந்தால் என்று 2013யில் வாக்குறுதி கொடுத்தனர்.கலைஞர் மற்றும் மு.க ஸ்டாலின்.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப வாக்குறுதி கொடுத்ததோடு சரியா.வயிறு எரிகிறது😡😡😡😡

  ReplyDelete
 2. பாசிச பாஜக ஆசிரியர் சங்கம் பெயர் என்ன?

  ReplyDelete
  Replies
  1. தேசிய ஆசிரியர் சங்கம்

   Delete
  2. திமுக சார்பு சங்கம் குஜா... திராவிட கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறதா... தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு எல்லா மொழி மக்களையும் ஒன்றினைத்து சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதா... எதற்கு இந்த திராவிடம்... விளக்கவே இல்லை... கன்னட மக்கள் நம்மை கண்டாலே வெறுக்கின்றனர்... கேரள மக்கள் நம்மை துரத்தாத குறையாக உள்ளது. தெலுங்கர்கள் மட்டும் பரவாயில்லை என்ற அளவிற்கு உள்ளது. இதில் என்ன திராவிடம் உங்களுக்கு மட்டும் வேண்டி இருக்கிறது... இங்கு உள்ள தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே திராவிடம்... இந்த மொழி மக்கள் எல்லாம் இல்லாத நிலையில் எதற்கு இந்த திராவிடர் தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வோம். இந்தத் திராவிடம் இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்று குவிக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தது.இதற்கு தான் இந்த திராவிடம் மறைமுகமாக தமிழர்களை அழிக்கும் வேலையில் உள்ளது...

   Delete
 3. திரு.ரஞ்சித் குமார் அவர்களின் செய்தி முற்றிலும் சரியானது.

  ReplyDelete
 4. CM said who are not voting for DMK get sad because of our work like positive but he gave sad for who are believed and voting for DMK also.😡😡😡😡😠😠😠😠

  ReplyDelete
 5. அரசு பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை மாறி பல வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் (ஈராசிரியர் பள்ளிகள்) என்ற நிலை எப்போது வந்ததோ அன்றே ஆசிரியர் சங்கம் செத்துப்போய்விட்டது.

  ReplyDelete
 6. ஆட்சி முடியும் வருடம் 2026 ஒன்றிரண்டு கோரிக்கை நிறைவேற்றினால் போதும் அனைத்து ஆசிரியர்கள் ஓட்டும் கிட்டும்.ராஜ தந்திரம்

  ReplyDelete
 7. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் நியமனத்தில் கவனம் செலுத்த வேண்டும். Don't waste time on training to teachers / emis mobile....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி