முதல்வர் பள்ளி: புதிய திட்ட முன்மொழிதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2022

முதல்வர் பள்ளி: புதிய திட்ட முன்மொழிதல்!கரோனா நோய்த்தொற்றால், நமது குழந்தைகளின் கல்வி மிக மோசமாகத் தடைபட்டு, இப்போதுதான் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது. ஆனாலும் கிராமப்புறங்களில் ஏராளமான குழந்தைகள் தினக்கூலி வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். இடைநிற்றல் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் வாய்ப்பு ஓங்கி நிற்கிறது.

 ஏற்கெனவே தரமிழந்து கிடக்கும் பள்ளிக் கல்வி இன்னும் மோசமாகும் ஆபத்து தொக்கி நிற்கிறது. அனைத்துப் பள்ளிகளின் தரத்தையும் ஒரே நாள் இரவிலேயே தரமுயர்த்தும் மந்திரம், மாயம் நம் யாரிடமும் இல்லாத நிலையில், தனித்துவம் மிக்க மாதிரிப் பள்ளிகளை ஆங்காங்கே ஏற்படுத்தி, பிற பள்ளிகளுக்கு சிறந்த முன்னுதாரணங்களை உருவாக்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். அதேபோல தகுதியும் திறமையும் வாய்ந்த, ஆர்வமும் முயற்சியும் நிறைந்த தமிழக மாணவ }மாணவியர்க்கு சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதும் இன்னொரு சிறந்த வழியாக அமையும்.

 அண்மையில் தில்லிக்குச் சென்றிருந்த தமிழக முதல்வர், தில்லி அரசு நடத்தும் மாதிரிப் பள்ளி ஒன்றை பார்வையிட்டிருக்கிறார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் கவர்னர் பள்ளி (கவர்னர்ஸ் ஸ்கூல்) என்ற பெயரில் ஓர் அருமையான கோடைகாலக் கல்வித்திட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற ஒரு திட்டத்தை முதல்வர் பள்ளி (சீஃப் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்) என்கிற பெயரில் தமிழக அரசும் நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

 தமிழகத்தின் சிறந்த, திறமையான இளம் குடிமக்களிடையே குடியுரிமை கலாசாரத்தைப் பரப்பிட "முதல்வர் பள்ளி திட்டம்' வெகுவாக உதவும். தங்கள் ஆற்றல்களையும், தேர்ந்த அனுபவங்களையும், சாதனைகளையும் தமிழ்ச் சமுதாயத்தோடு பகிர்ந்துகொண்டு பொதுநலத்துக்காய் உழைக்கும் தொண்டு மனப்பான்மையை, பொறுப்புணர்வை இத்திட்டம் வளரச்செய்யும். திறமைமிக்க மாணவ, மாணவியருக்கு தனிப்பட்ட முறையில் உதவுவதோடு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கும், நலத்துக்கும் இத்திட்டம் உகந்ததாக இருக்கும்.

 முதல்வர் பள்ளி என்பது ஒரு கோடைகாலக் கல்வித்திட்டம். பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் முக்கியமான பொதுத்தேர்வுகள் எழுத வேண்டியிருப்பதாலும், பதினொன்றாம் வகுப்பு ஓர் இடைவெளியைக் கொடுப்பதாலும், பதினொன்றாம் வகுப்பு படித்து முடித்திருக்கும் மாணவர்களை இத்திட்டத்தில் சேர்த்து பயிற்சியளிக்கலாம். பதினொன்றாம் வகுப்பில் பொதுத்தேர்வு இருந்தாலும், அறிவார்ந்த அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரையே முதல்வர் பள்ளிக்குத் தேர்ந்தெடுப்பதால், பன்னிரண்டாம் வகுப்பு கல்வி பாதிக்கப்படுமோ என அஞ்சத் தேவையில்லை.

 ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையான மே மாதத்தில் நான்கு வாரங்களுக்கு முதல்வர் பள்ளியை நடத்தலாம். அப்போது வெயிலும், வெப்பமும் அதிகமாயிருக்கும் என்பதால், கோடைகால சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களில் இயங்கும் உற்றதோர் பள்ளி அல்லது கல்லூரி வளாகத்தில் முதல்வர் பள்ளியை நடத்தலாம்.

 தமிழகமெங்குமிருந்து சுமார் 60 மாணவர்களும், 60 மாணவியரும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர்களை பெற்றோரே அழைத்துவந்து அனுமதித்துச் செல்லலாம். மாணவ }மாணவியரின் தங்குமிடம், சாப்பாடு, பாடப் புத்தகங்கள், கல்விச் சுற்றுலாச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

 120 மாணவர்களும் 20 பேராக 6 வகுப்புகளில் பாடங்கற்க அனுமதிக்கப்படுவர். தினமும் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். முதல்வர் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் சாதாரண பள்ளிப் பாடங்களைப் போலல்லாமல், தகராறு தீர்த்தல், எதிர்காலவியல், சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை மற்றும் சமூக நீதி, பெண்ணுரிமை, தமிழகப் பிரச்னைகள் போன்ற தலைப்புகளில் அமைக்கப்படும். மாணவர்கள் தமது விண்ணப்பங்களில் தமக்கு விருப்பமான மூன்று பாடங்களை வரிசைப்படுத்தலாம். அவற்றிலிருந்து ஒன்றை முதல்வர் பள்ளி நிர்வாகம் தேர்ந்தெடுத்து மாணவர்களை அனுமதிக்கும்.

 காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை "ஒன்றிணைக்கும் கருத்துப் பரிமாற்றம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஓர் ஆசிரியரின் தலைமையின்கீழ் தங்களுடன் வகுப்புகளில் பாடம் பயிலாத வேறு 20 மாணவர்கள் கொண்ட குழு, அனைத்து விதமான சமூக, பொருளாதார, அரசியல், கலாசார விஷயங்களை விவாதிப்பார்கள்.

 மாணவ - மாணவியர் தங்களின் தனிப்பட்ட அனுபவங்கள், தனித்தப் பார்வைகள், நிலைப்பாடுகள் போன்றவற்றை எந்தவிதமானத் தடையுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வர். இந்த அமர்வில் மாணவர்களின் கருத்துப் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்து வழிநடத்துபவராக மட்டுமே ஆசிரியர் இயங்குவார். சரி, தவறு பற்றிய விவாதம், விளக்கவுரை எதிலும் ஈடுபடமாட்டார்.

 மதிய உணவுக்குப் பின்னர் விளையாட்டுப் போட்டிகள், விவாதங்கள், பட்டிமன்றங்கள், இசைப் பயிற்சிகள் போன்ற நிகழ்வுகளோ அல்லது விற்பன்னர்களின் சிறப்புச் சொற்பொழிவுகளோ நடத்தப்படலாம். பல்வேறு துறைகளில் உள்ள பிரமுகர்கள் பேசுவதற்கு அழைக்கப்படலாம். மாலை கலாசார நிகழ்வுகள், கவியரங்கம், நாடகம், திறமைக் காட்சிகள், தரமிக்க திரைப்படக் காட்சிகள் போன்றவற்றை நடத்தலாம்.

 மொத்தக் குழுவாகவோ அல்லது ஒவ்வொரு வகுப்பும் தனித்தோ தேவைப்படும் கல்விச் சுற்றுலாக்களை மேற்கொள்ளலாம். முதல்வர் பள்ளித் திட்டத்தின் இறுதியில் தேர்வுகளுக்குப் பதிலாக, மாணவ - மாணவியர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவர். அல்லது ஆக்கத்திறன் கொண்ட படைப்புகளைச் செய்து சமர்ப்பிக்கலாம்.

 தங்குமிடத்தில் 15 மாணவருக்கு அல்லது மாணவியருக்கு ஓர் ஆலோசகர் (கவுன்சிலர்) வீதம் பொறுப்பளித்து தங்க வைக்கப்படுவார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு, உடல்நலத்திற்கு, மனஅமைதிக்கு, நன்னடத்தைக்கு ஆலோசகர்கள் முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்வர்.

 மாணவ - மாணவியர் இரவு பத்து மணிக்கு மேல் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பெற்றோர் வந்து தங்கள் குழந்தைகளை சந்தித்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

 முதல்வர் பள்ளி நிறைவடையும்போது, தமிழக முதல்வர் கையொப்பமிட்ட சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கலாம். முதல்வர் கல்வி திட்டத்தில் பங்கேற்றிருப்பது மாணவ - மாணவியரின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறப்பாக கவனிக்கப்படும்.

 அரசின் நிதிநிலைக்கேற்ப அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சூழலியல், நுண்கலைகள், தமிழகப் பிரச்னைகள், பன்னாட்டுப் பிரச்னைகள் என பல விஷயங்களை மையப்படுத்தி பல முதல்வர் பள்ளிகளை தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடத்தலாம்.

 முதல்வர் பள்ளி திட்டத்தினை முடித்துவிட்டு வெளியே வரும் மாணவ - மாணவியர் தமிழகப் பிரச்னைகள், தமிழரின் எதிர்காலம், தமிழக அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து சிந்தித்தும், விவாதித்துமிருப்பதால் மிகச்சிறந்த இளம் ஆளுமைகளாக முகிழ்ப்பார்கள். பதினாறு, பதினேழு வயது பருவத்தில் இருக்கும் இவ்விளைஞர்கள் இம்மாதிரி சிந்தனைகளாலும், விவாதங்களாலும் ஆழமான தாக்கத்திற்கு உள்ளாவார்கள். இளம் வயதில் ஏற்படும் இந்த சமூக, பொருளாதார, அரசியல் தாக்கம் உன்னதமான குடிமக்களாக, தலைவர்களாக இவர்களை உயர்த்தும். ஒரே மாதத்தில் குறைந்த செலவில் இத்தகைய ஆழ்ந்த மாற்றங்களை உருவாக்கும் திட்டம் உண்மையிலேயே அரசின் உன்னதத் திட்டமாக மாறுவது திண்ணம்.

 முதல்வர் பள்ளி போன்ற தனித்த பெயரோ அல்லது அடையாளமோ இல்லையென்றாலும், தமிழ்நாட்டில் இதுபோன்ற சிறப்புக் கல்விகள் நடைபெற்றிருக்கின்றன என்பதுதான் உண்மை. என்னுடைய மாணவப் பருவத்தில் 1978-79 கல்வியாண்டில் இதழியல் பாடத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய ஒரு மாதப் பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றன. அக்கல்லூரியின் திறமைமிக்க ஆசிரியர்கள் அருமையாகக் கற்பித்தனர்


ஆனால், இதர வழிகளில் அந்தத் திட்டம் எங்களுக்கு பயன்படவேயில்லை. திருவல்லிக்கேணியில் அமைந்திருந்த மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதியின் தொலைக்காட்சி அறையில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி ஆண் மாணவர்கள் மட்டும் தங்கவைக்கப்பட்டோம்.

 தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த தோழர்களை, தோழியரை முறைப்படி அறிந்து கொள்ளவோ, சேர்ந்தமர்ந்து சாப்பிடவோ, சமூக - பொருளாதார - அரசியல் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ, கலாசார பரிவர்த்தனைகளில் ஈடுபடவோ வாய்ப்பேயின்றி, திட்டத்தின் ஐம்பது விழுக்காடு பலன் வீணடிக்கப்பட்டது.

 இக்குறைகளை நிவர்த்தி செய்து அமெரிக்காவின் "ஆளுநர் பள்ளி' பாணியில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அமலாக்கப்பட்டால், தமிழக முதல்வரின் மிகப் பெரும் சாதனையாக முதல்வர் பள்ளி விளங்கும் என்பது உறுதி. விளையும் பயிர்களை முளையிலேயே கண்டுபிடித்து, இம்மாதிரியான சிறப்புப் பயிற்சிகள் வழங்கி உன்னதத் தலைவர்களாக உருவாக்கிவிட்டால், பல்வேறு துறைகளிலும் நிலவும் தலைமைக்கான வறட்சியை தடுத்தழிக்க முடியும்.

 இந்த கரோனா காலகட்டத்தில் இணைய வழியாகக்கூட ஒரு "முதல்வர் பள்ளி' அமர்வை நடத்தலாம். துவண்டு கிடக்கும் பள்ளி மாணவர்களை, கவலையுற்றிருக்கும் அவர்களின் பெற்றோரை அது நிமிர்ந்து உட்காரச் செய்யும். இந்த முயற்சி இந்தியா முழுவதும் கவனிக்கப்படும், பின்பற்றப்படும்.

 

 கட்டுரையாளர்:

 தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி