பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அறிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2022

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அறிக்கை!!!

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கைக்கு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பதில் அறிக்கை:

• சமீபத்தில் திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது. 

• தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர்

, இத்திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத்திட்டத்தின்படி , பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது. 

இத்தொகையை 2003 - ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ( NPS ) சேர்வதா , இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும். அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் ரூ .53,555,75 கோடியாக உள்ளது.

காப்பீட்டு இத்தொகையில் ரூ .41,264.63 கோடி , இந்திய ஆயுள் நிறுவனத்தின் ( LIC ) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும் , ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூலப் பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது . அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதை தான் பின்பற்றினார்கள்.

இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது . ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு , அரசு பங்களிப்பு , வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது . எனவே , இதை வேறு எந்த பணிக்கோ , நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை.

 இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எதையும் மறைக்காமல் , ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும் , பொதுவெளியிலும் வைக்கப்பட்டுள்ளது . பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு , பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது.

தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும் . இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உண்மைநிலை இவ்வாறு இருக்க , திரு.அண்ணாமலை அவர்களின் பேச்சு , அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

இது , அவரின் அறியாமையையும் , நிதிமேலாண்மை குறித்து தக்க விவரங்கள் இல்லாமல் பேசும் வழக்கத்தையே வெளிப்படுத்துகிறது.




3 comments:

  1. .. மேற்படி தகவல்கள் உண்மையோ, பொய்யோ?

    ReplyDelete
  2. CPS ல் பணியாற்றி இதுவரை ஓய்வு பெற்ற யாருக்குமே மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.. இந்த அமைச்சருக்கு இது தெரியாதா?

    ReplyDelete
  3. தமிழக நிதியமைச்சர் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையா அல்லது பொய்யா என்பது நமக்கு தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் அதுவும்கூட அண்ணாமலை அவர்களால்தான் வெளிவந்திருக்கிறது என்பது மட்டும் 100% உண்மை. ஆகவே இந்த விசயத்தில் தி. அண்ணாமலை அவர்களுக்கு நன்றி🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி