மாணவர் சேர்க்கை நடைமுறை அரசின் விதிகளின் படி நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை உறுதிப்படுத்தப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2022

மாணவர் சேர்க்கை நடைமுறை அரசின் விதிகளின் படி நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை உறுதிப்படுத்தப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை.

ஒர் கல்லூரியில்,  அரசின் விதிகளின் படி மாணவர் சேர்க்கை நடைமுறைப் பின்பற்றப் படவில்லை என்ற புகார் எழுந்தவுடன், உயர்கல்வித் துறை உடனடியாக தலையிட்டு விசாரணை மேற்கொண்டு அரசின் விதிகளின்படி‌ மாணவர் சேர்க்கை நடப்பதை உறுதிபடுத்த வேண்டாமா?


கல்லூரிக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர் இதில் கூடுதல் அக்கறைச் செலுத்தி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பலநூறு மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும். 


மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 2022 - 2023 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த அரசின் விதிகளின் படி "மாணவர் சேர்க்கைக் குழு" அமைக்கப்படவில்லை. மாணவர் சேர்க்கைக் குழு அமைக்காமல் அரசு உதவிபெறும் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவது எந்த வகையில் நியாயம்? 


மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றுவது, முறையான கட்டணங்களை மட்டுமே வசூலித்து, அதற்குரிய முறையான ரசீது மாணவர்களுக்கு வழங்குவது, இத்தகைய முக்கிய அம்சங்களை கண்காணிக்க  ஆண்டு தோறும் ஒவ்வொரு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரியிலும் "மாணவர் சேர்க்கைக் குழு" அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 


அத்தகைய குழுவை மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகம் அமைக்கவில்லையென்றால், முறைப்படியான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் விரும்பவில்லை என்றுதானே பொருள்? 


குழு அமைக்கவில்லை என்று தெரிந்தும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் விதிமீறல்களுக்கு துணை போகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. 


இரண்டு நாட்களாக பேராசிரியர்கள் அரசின் விதியைப் பின்பற்றி "மாணவர் சேர்க்கைக் குழு" அமைத்தல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களை இரவு முழுக்க இருட்டில் அமரவைத்து, தற்போது அவர்கள் பயன்படுத்த முடியாத அளவில் கழிப்பறைகளை அடைத்துள்ளனர்.


இரண்டு நாட்கள் நடக்கும் போராட்டங்களுக்குப் பிறகும் அரசின் விதிகளை கல்லூரி நிர்வாகம் பின்பற்றி நடக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. 


அரசு ஆணைகளை அமல்படுத்த வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தை அடக்குமுறை கொண்டு ஒடுக்கிவிட முடியாது. அடக்குமுறையை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகம் துணிந்தால், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் போராட்டம் மேலும் வீரியம் அடையும். 


மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகம் அரசின் விதிகளின் படி "மாணவர் சேர்க்கைக் குழு" அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை  தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதையும், அறிவிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிப்பதை உறுதிப்படுத்த உரிய கண்காணிப்புக் குழுக்களை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும். 


புகார் தெரிவிக்க உரிய வழிமுறைகளைப் பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும். பெறப்படும் புகார்களைப் பதிவுச் செய்து, தொடர் நடவடிக்கைகளை புகார் அளித்தவருக்கு தெரியப்படுத்த உரிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

14-A, சோலையப்பன் தெரு, தி. நகர், 

சென்னை - 600017

மின்னஞ்சல்: spcsstn@gmail.com

தொலைபேசி: 9445683660

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி