அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிக்கான பேப்பர் வாங்க ரூ.9.22 கோடி - வலைதள சர்ச்சைகளுக்கு விளக்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 26, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிக்கான பேப்பர் வாங்க ரூ.9.22 கோடி - வலைதள சர்ச்சைகளுக்கு விளக்கம்

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்துவதற்கான ஏ4 பேப்பர் வாங்குவதற்கு ரூ.9.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கணினி வழி விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


இதற்கான வினாத் தாள்களை அச்சிட தேவையான ஏ4 பேப்பர் வாங்குவதற்காக, எமிஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படை யில் ரூ.9.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்துக்கு ரூ.54.14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இந்த நிதியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இந்த சுற்றறிக்கை பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘ஏ4 பேப்பர் வாங்க ரூ.9.22 கோடி செலவாகுமா? தவிர, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், அந்த மாணவர்களுக்கு விநாடி வினா நடத்துவதற்கான சூழல் இல்லை. எனவே, இதற்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தர வேண்டும்’ என்று வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கல்வித் துறை மூலம் நிர்வகிக்கப்படும் எமிஸ் தளத்தின் தகவல் அடிப்படையிலேயே நிதி

ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற விநாடி வினா போட்டிகள் நடத்தும்போது, மாணவர்களிடம் இருந்துதான் பேப்பருக்கான தொகை வசூலிக்கப்பட்டது. அதை தவிர்க்க தற்போது நிதி வழங்கப்படுகிறது. இதில் தவறு எதுவும் நடக்கவில்லை’’ என்றனர்.

2 comments:

  1. வினாடி வினா கணிப்பொறியில் நடைபெறவிருக்கும் அப்படி இருக்கையில் வெள்ளை காகிதம் எதற்கு?

    ReplyDelete
  2. கணினி வழித்தேர்வு என பெயர் வைத்துக் கொண்டு வினாத்தாள் அச்சடிக்க காகிதம் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு முன்பு கணினி வழி இணைய தேர்வு நடத்திய போது எந்த மாணவர்களையும் நாம் பேப்பர் எடுத்து வர வேண்டும் என்று கூறவில்லையே! என்னமோ நடக்குதுன்னு மட்டும் புரியுது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி