புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2023

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீக்கம்: சேர்க்கை இடங்களை அதிகரிக்க ஏஐசிடிஇ அனுமதி

 

நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு இருந்த தடையை ஏஐசிடிஇ நீக்கியுள்ளது. மேலும், சேர்க்கை இடங்கள் அதிகரிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளையும் வழங்கியுள்ளது.


நம் நாட்டில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை வகுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும்.


அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஏஐசிடிஇ ஆய்வுக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக அமலில் இருந்த புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை வரும் 2023-24-ம் கல்வியாண்டு முதல் நீக்கப்படுகிறது. இதையடுத்து போதிய உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் கல்லூரிகள் தொடங்க உரிய விதிகளின்படி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும்.


எனினும், வளரும் தொழில்நுட்பப் படிப்புகள் தொடங்குதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளை அந்த கல்வி மையங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுதவிர சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 300-ல் இருந்து 360 வரை கல்லூரிகள் உயர்த்திக் கொள்ளலாம். புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.


அதன்படி 50 சதவீத மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளுக்கும் இனி செயற்கை நுண்ணறிவு உட்பட வளரும் தொழில்நுட்ப படிப்புகளை தொடங்க அனுமதிக்கப்படும். எனினும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை, அந்த கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், குறைந்தபட்சம் 3 முதன்மைப் படிப்புகளை ஏற்கெனவே கொண்டிருக்க வேண்டும்.

ஆலோசகர்கள் நியமனம்: பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பிஎம் கேர் சூப்பர் நியூமரரி சேர்க்கை திட்டம் தொடரப்படாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க கல்லூரிகளில் பிரத்யேக ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு பல்கலை.கள் மற்றும் ஆய்வு மையங்களுடன் நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.


தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறவும், நீட்டிக்கவும் விரும்பும் கல்லூரிகள் ஏப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி