அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2023

அனைத்து பள்ளிகளிலும் Team Visit - CEO -மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சிவக்குமார் அவர்களுடைய பள்ளிக் கல்வித்துறை விரோத செயல்பாட்டின் மீது உடன் உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறோம்...


AIFETO..04.07.2023

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்: 36/2001.

பெறுநர்:


மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தலைமைச் செயலகம்,

சென்னை-600009.


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கனிவான வணக்கம்!...


பள்ளிக்கல்வித்துறையின் மீது ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வெறுப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சிவக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கையையும் கட்டுப்பாட்டினையும் விதித்திட வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், நீண்ட காலம் பொது வாழ்வில்  பெற்றுள்ள அனுபவங்களின் வாயிலாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.


 தலைவர் கலைஞர் அவர்கள் சம்பாதித்துள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்கு வங்கிக்கு  சேதாரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அக்கறை உணர்விலும், இதய பற்றுதலுடனும் தாங்கள் ஆசிரியர் சங்கங்களை எல்லாம் அழைத்து இரண்டு நாட்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை கேட்டு கருத்தொருமித்து அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு வருகிறீர்கள்.. நன்றி பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 திருச்சிராப்பள்ளி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும். மண்டல ஆய்வினை ஆர்வமாகவும் வேகமாகவும் நடத்தி வந்த தாங்கள்  மண்டல ஆய்வில் இருந்து முதலில் தங்களை விடுவித்துக் கொண்டீர்கள்.  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் மிக வேகமாக மண்டல ஆய்வை நடத்தி வந்தார். மண்டல ஆய்வில் இருந்து அவரும் பிறகு விடுவித்துக் கொண்டார்.


 இயக்குனர்களும் Team Visit  என்ற நிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்தில்  அக்கறை காட்டி வருகிறார்கள்.


 திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தொடக்க கல்வித்துறைக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்களை தனியாக ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளிவந்ததற்கு பிறகும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோரை நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தி ஆணை பிறப்பித்து வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதம் கூட ஆகாத சூழலில் Team Visit என்ற பெயரில் அணிவகுத்துக் கொண்டு இவரது தலைமையில் தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வரை ரெய்டு நடப்பதை போல் ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள  பள்ளி ஒன்றில் குற்றவாளிகளை தேடிப்பிடிக்கும் காவல்துறை போல் சென்று பிடித்து வருகிறார்.


 தொடக்கக் கல்வித் துறையை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. ஏனைய எல்லா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவரவர்கள்  அவரவர் பணியினை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ கல்வி அமைச்சர் அவர்களுடைய தனி நிர்வாகத்தினை பெற்றவர் போல் விதிகளை மீறி அத்துமீறிய  செயல்பாடுகளால் ஆக்கிரமித்து கூடுதலாக விளம்பரப்படுத்திக் கொண்டு அனைவரையும் Team Visit என்ற பெயரில் முற்றிலும் தொடக்கக் கல்வியை நிர்வாகத்தினை செயலிழக்கச் செய்து ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மீது வெறுப்புணர்வினை உச்சம் தொடுகின்ற அளவுக்கு ஈடுபட்டு வருகிறார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் சென்ற ஆண்டுக்கு வினாத்தாள்களுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் இவர் சென்ற ஆண்டு வினாத்தாள்களுக்கு இந்தாண்டு பணம் வசூல் செய்து வருகிறார்.


வாக்கு வங்கியினை முற்றிலும் சேதாரப் படுத்தி வருகிறார். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் நாளை முதல் தொடருமேயானால்....  இரண்டு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள் பறிபோன அவர்களின்  சுதந்திர உணர்வினை பாதுகாப்பதற்காக முதன்மைக் கல்வி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.


 எங்களைப் போன்றவர்களுக்கு இரண்டு கவலை உண்டு. ஒன்று ஆசிரியர்களின் அன்றாட நடவடிக்கைகள் அரசின் மீதும், பள்ளிக்கல்வித்துறையின் மீதும் கடுமையான விமர்சனம் செய்வதற்காக தூண்டி விடுகிறார்.


இரண்டு தொடக்கக் கல்வித் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் முரண்பட்டு செயல்படக்கூடிய நிலைமையும் உருவாக்கி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கல்வி அமைச்சர் அவருடன் இருக்கின்ற நெருக்கத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். இது மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்தும் செயலாகும். பள்ளி பார்வை என்பது வேறு; அதிகாரத்தினை இறக்கை கட்டி கொண்டு பறப்பது போல் நடப்பது என்பது வேறு;


 தாங்கள் உடனடியாக தலையிட்டு அவரது நடவடிக்கைகளை  நெறிப்படுத்திட வேணுமாய் பெரிதும் வலியுறுத்திக்  கேட்டுக்கொள்கிறோம்.


 மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் அவர் யார் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்?. என்பதை முதலில் ஆய்வு செய்து கொண்டு அவருடைய செயல்பாடுகளை உடன் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமாய் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


 இவரது செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களின் நலனை, தொடக்கக் கல்வித் துறையின் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்கான களப்பணியினை மேற்கொள்வோம்!.. என்பதையும் உரிமை உறவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


திரு சிவக்குமார் அவர்கள் பணியாற்றிய அலுவலகங்களில் எல்லாம் ஆய்வு செய்து பார்த்தால்... கோப்புகளை சரிபார்த்தலில் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாத அலுவலர்தான் திரு.சிவகுமார் என்பது சான்றாகும்.


உடனடி தீர்வு வேண்டுகிறோம்....


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

3 comments:

 1. ஊதிய உயர்வுக்கும் ஓய்வூதியத்திற்கும் போராடும் இந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள்


  ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர் நியமிக்கவும் பாட ஆசிரியர் நியமிக்கவும் வேண்டும் என்று ஏன் ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்காமல் இருக்கின்றன ?


  ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் பல வகுப்புகளை ஒரே ஆசிரியர் கையாளும் சூழல் இருப்பது குழந்தைகளின் கல்வி உரிமையை மறுப்பது ( பறிப்பது) என்பதாகும்.  எழுத்துக்களையும் வார்த்தைகளையும் கற்பிப்பதற்கு எதற்கு பலவகையான கல்வித் திட்டங்களும் கற்பித்தல் முறைகளும்?

  ReplyDelete
 2. ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஆகியவற்றை இணைத்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது போல பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஆகியவற்றையும் இணைத்து கற்றல் கற்பித்தலை மேற்கொண்டு விட்டு செல்லலாம்?


  அரசு பள்ளிகளில் உள்ள தொடக்க கல்வி நிலையில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமிக்காமல் எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களைக் கொண்டு வருவதும் பொருட்களை தயாரிப்பதும் பயிற்சிகளை அதிகப்படுத்துவதும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது எமிஸ் புள்ளிவிபர பணிகளை செய்வதும்

  ஆகியவற்றை ஆசிரியர் சங்கங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு ஊதிய உயர்வுக்கும் ஓய்வூதியத்திற்கும் மற்றும் போர் கொடி தூக்குவது எவ்விதத்தில் நியாயம்?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி