சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்தா? - பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதாக தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2025

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்தா? - பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதாக தகவல்

 

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை-2020-ன்படி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019-ல் கொண்டு வந்தது.


அதன்படி, 5, 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைபவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர்கள் வெற்றி பெறாவிட்டால், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சட்ட திருத்தம் முழுமையாக அமலுக்கு வரவில்லை.


இந்த நிலையில் 5, 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் 30 சதவீதத்துக்கும் கீழ் மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி வழங்கப்படாது எனவும், சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்து, ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை சிபிஎஸ்இ வாரியம் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. எனினும், 5, 8-ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வது தொடர்பாக சிபிஎஸ்இ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வாரியம் முறையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி