கடந்த ஆண்டு பிளஸ் 1 ல் பெயிலானவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2025

கடந்த ஆண்டு பிளஸ் 1 ல் பெயிலானவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

 

'கடந்த கல்வியாண்டுகளில், 'பிளஸ் 1' பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், பெயரளவுக்கு பாடங்களை நடத்தி விட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில், மாணவ, மாணவியரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்ற தகவல் வெளியானது.

இதற்கு தீர்வு காண, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 - 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 7,098 மாணவ, மாணவியர் எழுதினர்.

துணைத்தேர்வு தேர்வு எழுதியவர்களில், 7.43 லட்சம் பேர், அதாவது, 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள், 31ல் வெளியாகின.

தற்போது, தமிழக அரசு சார்பில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், கடந்த கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறா மல் உள்ளனர். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:


மாநில கல்விக் கொள்கை அடிப்படையில், இந்த கல்வியாண்டு முதல், 'பிளஸ் 1' மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

அரசாணை இந்த அறிவிப்பு, 2025 - 26ம் கல்வியாண்டில், பிளஸ் 1 படிப்போருக்கு மட்டுமே பொருந்தும்.

கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வெழுதி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள், பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி