தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடம் போதிப்பதற்காக 1980களில் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப் பட்டனர். பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்ததின் விளைவாக 1990ஆம் ஆண்டு முதல் படிப்படியாக 4000க்கும் மேற்பட்ட தொழில் கல்வி ஆசிரியர்கள் அடிப்படை ஊதியத்தில் முழு நேர ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் பெற்று பணியாற்றி வந்தனர்.
மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் போதித்தாலும் பட்டதாரி ஆசிரியர் ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்வு நிலை ஊதியமும், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறப்பு நிலை ஊதியமும் பெற்று பணியாற்றி வந்தனர்.
தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு இல்லாத நிலையில் 12-9-2018ஆம் தேதியிட்ட அரசாணை 306ன் படி ரூ 5400 தர ஊதியம் தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
வயது முதிர்வு காரணமாக 2018ஆண்டு முதலே பல தொழில் கல்வி ஆசிரியர்கள் பணி நிறைவு பெறத் தொடங்கி ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
நிகழாண்டு மே மாதம் பணி நிறைவு பெற்ற தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ 5400 லிருந்து Rs 4800 ஆகக் குறைத்து கணக்கீடு செய்து மீள கோப்புகளை அனுப்புமாறு மாநில கணக்கு அலுவலர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாடு அரசாணை எண் 306 ன் படிதான் தர ஊதியம் ரூ 5400 பெற்றதாகவும், திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என தொழில் கல்வி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுபற்றி சென்னை மாநில கணக்கு அலுவலர் அலுவலகத்தில் கேட்டபோது, தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்கியுள்ளது குறித்து தமிழக அரசிடம் தெளிவுரைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட தொழில் கல்வி ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பி வருகிறார்கள். அக் கடிதத்தில் கீழேக் கண்டவாறு குறிப்பிட்டுள்ள னர்
"சுமார் 10 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியராகவும், 30 ஆண்டுகள் முழு நேர தொழில் கல்வி ஆசிரியராகவும் மேல்நிலைப் பிரிவில் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களை, பொறியாளராகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்கி இருக்கிறோம். அரசுப் பணியை எதிர்பாராமல் சுயதொழில் தொடங்கி ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்குப் பணி வழங்கும் அளவிற்கு தொழிலாlதிபர்களாக தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் உயர்ந்துள்ளார்கள். ஓய்வூதியம் பெறத் தகுதி உள்ள எங்களுக்கு ஓய்வு பெற்று நான்கு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவித பணப்பலனும் பெறாமல் காலம் தாழ்த்தி வருவது பெரும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் தந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழில் கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள். தமிழக அரசு, அரசாணை 306 படி தர ஊதியம் ரூ 5400 பெற்று, கடந்த மே மாத இறுதியில் பணி நிறைவு பெற்றோம். கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியமும், ஓய்வூதியப் பணப்பலனும் பெறாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களுக்கு விரைவில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் " எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு கடலூர் மாவட்ட நிர்வாகிகள், "மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டு பட்டதாரி ஊதியம் பெற்று வரும் தொழில் கல்வி ஆசிரியர்கள், அரசாணை 306ன் படி பெற்ற தர ஊதியம் Rs 5400 ஐ Rs 4800 ஆகக் குறைத்து கணக்கிட்டு கூடுதலாக பெற்ற தொகையை அரசுக் கணக்கில் திரும்ப செலுத்த சொல்வது வேதனை தருகிறது. இதனால் ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய தெளிவுரையை கணக்கு அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி, அரசாணை 306ன் படி, அவர்கள் பெற்று வந்த Rs 5400 தர ஊதியம் அடிப்படையில் ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் " என்றனர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி