சிறப்பு ஆசிரியர் தேர்வில் போனஸ் மதிப்பெண் தொடர்பான அரசாணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2026

சிறப்பு ஆசிரியர் தேர்வில் போனஸ் மதிப்பெண் தொடர்பான அரசாணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

டிஆர்பி சிறப்பு ஆசிரியர் தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணியாற்றும் அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியபோது, ‘தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். கோடைவிடுமுறையான மே மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சிறப்பு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தேர்வு நடத்தும்போது, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிக் காலத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட போனஸ் மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்பட வில்லை.

கடைசியாக 2017-ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 1,300 பேர் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 8 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு ஆசிரியர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 95 மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது, இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமனம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி