5,000 பள்ளிகளில் விரைவில் ஏஐ கோடிங், பைத்தான் பயிற்சி: பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2026

5,000 பள்ளிகளில் விரைவில் ஏஐ கோடிங், பைத்தான் பயிற்சி: பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

 

விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

துறைச் செயலர் சந்திரமோகன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் எஸ்.ஜெயந்தி, அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலர் இரா.சுதன், துறை இயக்குநர்கள் எஸ்.கண்ணப்பன் (பள்ளிக்கல்வி), பி.ஏ.நரேஷ் (தொடக்கக் கல்வி), சசிகலா (அரசுத் தேர்வுகள்), சுகன்யா (தனியார் பள்ளிகள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன், உறுப்பினர் எம்.பழனிசாமி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

தேர்ச்சியில் சாதனை

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.3 சதவீதம் பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சாதனைதான்.

ஆனால், இந்த தேர்ச்சி போதாது. தேர்ச்சியில் விடுபட்டவர்கள், சக மாணவர்களின் வேகத்துக்கு வராதவர்கள், அதாவது என்னைப் போல மெதுவாக கற்பவர்களும் தேர்ச்சி வட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு வெறும் கூட்டல், கழித்தல், பாடங்கள் மனப்பாடம் என்று இருந்த தலைமுறையை மாற்றி, 5 ஆயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கோடிங், பைத்தான், விர்ச்சுவல் ரியாலிட்டி, எச்டிஎம்எல் பயிற்சிகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பின்னர், தமிழகம் முழுவதும் இப்பயிற்சி விரிவுபடுத்தப்படும். முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போது அவர்களது மனநலன்மேம்படும்.

போதைப் பழக்கம் போன்ற தவறான பாதைகளுக்கு செல்ல மாட்டார்கள். அதேபோல, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை முதல் கழிப்பறை வரை அனைத்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

1 comment:

  1. கணினி ஆய்வகங்கள் கணினி ஆசிரியர்கள் சரியாக இல்லாதவரை இது போன்ற திட்டங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த பலன்களை அளிக்காது. நடக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே ஒழிய எந்த நன்மையும் ஏற்படாது. கடந்த கால அனுபவங்களை அடிப்படையில் நான் சொல்கிறேன் உண்மையாக கணினி ஆய்வகங்கள் உள்ள பள்ளிகளை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் சரியாக செயல்படவில்லை. அடுத்ததாக கண்டிப்பாக அதற்காக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் திட்டம் ஒரு பலனையும் தராது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி