அரசுப் பள்ளி மாணவர்களின் மன நலன் காத்த உளவியல் ஆலோசனை திட்டம் மீண்டும் உயிர் பெறுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2026

அரசுப் பள்ளி மாணவர்களின் மன நலன் காத்த உளவியல் ஆலோசனை திட்டம் மீண்டும் உயிர் பெறுமா?

 

கோவை டவுன்ஹால் அருகே அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் உளவியல் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் பராமரிப்பின்றி, தூசு படர்ந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனக் குழப்பம், பாலியல் பிரச்சினைகள், தேர்வு அச்சம், செல்போன் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையத்தை கடந்த 2013-2014 கல்வியாண்டு முதல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இத்திட்டம் முதற்கட்டமாக ரூ.3 கோடி செலவில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு வேன் ஒதுக்கப்பட்டு, அதில் பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர், உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு நடமாடும் ஆலோசனை மையமும் சுற்றியுள்ள 3 அல்லது 4 மாவட்டங்களை கவனிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் பணியாக அந்தந்த மண்டலத்திலுள்ள உளவியல் ஆலோசகர்கள் மாவட்டந்தோறும் பிரச்சினைக்குரிய பள்ளிகள், மதிப்பெண்ணில் பின்தங்கிய பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரித்து பட்டியலிட்டனர்.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உளவியல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறையில் தனியாகவோ அல்லது வேனிலோ அமர வைத்தோ ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக விரிவுபடுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது.

தொடர்ந்து 2 மாவட்டங்களுக்கு ஒரு வாகனம் என விரிவுபடுத்தப் பட்டது. இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்துக்கு பிறகு, நடமாடும் ஆலோசனை மையம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த திட்டத்துக்காக சேர்க்கப்பட்ட உளவியல் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வரவில்லை.

இதன் காரணமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகங்களில் நடமாடும் ஆலோசனை மைய வாகனங்கள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் கோவையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் இந்த வாகனம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

அதேபோல் கோவை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலரின் வாகனம் பழுதான நிலையில் பல ஆண்டுகாலமாக இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் வெளியில் நிறுத்தி வைக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

நல்ல நிலையில் இருந்த வாகனங்கள் பல ஆண்டுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவை வீணாகிவிட்டன. இவற்றை அரசின் பிற திட்டங்களுக்கு மாற்றிவிட்டால் கூட நல்ல பலன் தரும்.

குழந்தைகளுக்கு என்றென்றைக்கும் அத்தியாவசியத் தேவையாக இருந்து வரும் உளவியல் ஆலோசனை திட்டத்துக்கு, தமிழக அரசு உயிர்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதேபோல் பல மாவட்டங்களில் காட்சிப்பொருளாக கரையான் அரித்துக்கொண்டிருக்கும் இந்த வாகனங்களை பராமரித்து திட்டத்தை மீண்டும் செய்லபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கல்வியாளர்கள் கூறும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைக்குகவுன்சிலிங் அமைப்பு என்பது இல்லை. 2013-14 கல்வியாண்டில் கொண்டு வரப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் பேருதவியாக இருந்தது.

இதனால் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்பட்டது. எனவே, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். மேலும் விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி