23.08.2010க்கு முன்னர் பணியேற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு - சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
"ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) 23.08.2010-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியிலிருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 01.09.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) στ. 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025-இல் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும். மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் எனவே, வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.
1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் / சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."
TET விலக்கு - தனித் தீர்மானம்.pdf
👇👇👇👇
Download here
மிக்க நன்றி
ReplyDelete