மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்களிக்க தாக்கலான வழக்கில், 'அவ்வாறு விலக்களிக்க முடியாது.
சட்டப்படி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம்,' என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மணிவாசகன் தாக்கல் செய்த பொதுநல மனு: பொதுத் தேர்விற்கு கற்பித்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதால், பாடத்திட்டத்தை உரிய காலத்திற்குள் முடித்தல், தேர்வு நடத்துதல், அக மதிப்பீடுகளை மேற்கொள்ளுவதில் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் 59 அரசுத்துறைகள் உள்ளன.
அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் உதவியை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பயன்படுத்த முடியும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களை கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்களிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் ஆஜரானார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக இயக்குனர் தரப்பு வழக்கறிஞர் நாராயண் ராம்:
ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம். இதர பணியில் ஈடுபடுத்தக்கூடாது என இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மாணவர்களின் குடும்ப சூழல், பொருளாதார நிலையை ஆசிரியர்கள் அறிந்திருப்பர்.
இதனால் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை எளிதில் கையாள முடியும். தேவை அடிப்படையில் பொருத்தமானதாக கருதப்படும் ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முடிவெடுக்க கலெக்டர்களுக்கு அதிகாரம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறி பதில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் கலெக்டர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து செப்.7க்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி