தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் தானாகவே டெட் தேர்வில் விலக்கு கிடைக்காது. எனவே நிரந்தர விலக்கிற்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தம் அவசியம் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த தனித் தீர்மானத்தால், ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு கிடைக்குமா? ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஓர் தீர்ப்பை வழங்கியது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் 2 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டு்ம். அப்போது தான் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக, அதாவது 50 வயதை கடந்த ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர்வதற்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும், ஆசிரியர் சங்கங்களும் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டின. ஆனாலும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற முடிவில் உச்ச நீதிமன்றம் பின்வாங்கவில்லை.
கடந்த ஆட்சியில் இது தொடர்பாக, ஆசிரியர் சங்கங்களுடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டன. அதன் பின்னர், தமிழ்நாட்டில் முதல்முறையாக பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு முதல் முறையாக சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவதற்கு 2026 பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 4-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 59,535 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 5-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 1,60,929 பேரும் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றி உள்ளது.
தீர்மானத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சட்டப் பேரவையில் முன்மொழிந்து பேசும் போது, "தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து முழுமையாக விலக்கு அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பணியில் உள்ள 3,28,701 ஆசிரியர்கள், இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும் என்ற நிலைக்கும், தேர்ச்சி பெறாவிட்டால் பணியிழப்புக்கு ஆளாக நேரிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, 23.8.2010-க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "இந்த தீர்மானம், ஒரு முக்கிய அரசியல் நகர்வாக இருந்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, தீர்மானம் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தராது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கான வலுவான கோரிக்கை மட்டுமே. இதனால் தானாகவே ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு கிடைக்காது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மாறாது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (ஆர்டிஇ), பிரிவு 23-ல், 23.08.2010-க்கு முன்பு, அப்போது நடைமுறையில் இருந்த விதிகளின்படி நியமிக்கப்பட்டு, உரிய கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சித் தகுதி பெற்ற ஆசிரியர்கள், பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்ற புதிய பாதுகாப்புப் பிரிவு சேர்க்கப்பட வேண்டும்.
அந்தச் சட்டத்தில், பணித் தொடர்ச்சி பாதுகாப்பு, பணிநீக்கம் மற்றும் கட்டாய ஓய்வில் இருந்து பாதுகாப்பு, ஊதிய உயர்வு, ஓய்வூதிய பாதுகாப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமலும் பதவி உயர்வு, ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் பாதுகாப்பு ஆகியவை தெளிவாக இடம்பெற வேண்டும்.
நாடாளுமன்ற நடைமுறை
பின்னர் மத்திய கல்வி அமைச்சகம், சட்டத் திருத்த வரைவைத் தயாரிக்க வேண்டும். மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் கருத்தைப் பெற வேண்டும். அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் ஒரே வடிவில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி, அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகே அது சட்டமாகும். அதற்கேற்ப தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அறிவிக்கைகளும் மாநிலப் பணி விதிகளும் திருத்தப்பட வேண்டும்.
இது, சாதாரண சட்டத் திருத்த மசோதா என்பதால், பொதுவாக, இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எளிய பெரும்பான்மையே போதுமானது. அரசியலமைப்புத் திருத்தத்திற்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவையில்லை.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் தற்போதைய பிரிவு 23(2)-ன் படி மத்திய அரசு தற்காலிகத் தளர்வை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்க முடியும். எனவே நிரந்தர TET விலக்கிற்கு நாடாளுமன்றச் சட்டத் திருத்தமே அவசியம். நாடாளுமன்றம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நேரடியாக ரத்து செய்ய முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு ஆதரமான ஆர்டிஇ சட்டம் மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிகளைத் திருத்த முடியும்.
தமிழக அரசு அடுத்து செய்ய வேண்டியது என்ன?
சட்டமன்றத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் மாதிரி சட்டத் திருத்த மசோதாவையும் இணைக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் ஆதரவையும் பெற வேண்டும். சட்டம் அமலுக்கு வரும் வரை ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் முதல் அரசியல் வெற்றி. உண்மையான சட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமெனில் 23.08.2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு வழங்கும் வகையில் ஆர்டிஇ சட்டம் பிரிவு 23-ஐ நாடாளுமன்றம் திருத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான தாஸ் கூறுகையில், "இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கும் இதே பாதிப்பு உள்ளதால், ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்புத் தீர்மானம் ஒரு வரலாற்று நிகழ்வு. டெட் தேர்வால், சுமார் 3.75 லட்சத்திற்கும் மேலான ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் மட்டும் சுமார் 62,000 ஆசிரியர்கள் பாதிப்பில் உள்ளனர்.
இந்த சிறப்பு தீர்மானத்தை முன்வைத்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறுகையில்,"23.8.2010-க்கு முன்பு அப்போதைய நடைமுறைகள், தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) முழுமையான, நிரந்தர விலக்கு அளிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டத் திருத்தம் மற்றும் சுற்றறிக்கை
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் மூலமாக தெளிவான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணிப்பலன்களும் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனி தீர்மானத்தை வைத்து தகுதி தேர்வினை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் இது உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு. அதே நேரம், இந்த தனித்தீர்மானம் மூலம் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஆதரவாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முந்தைய அரசிடம் வலியுறுத்திய போது எதுவும் நடக்கவில்லை. தனி தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா ? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
அதற்கு முன்னதாக தகுதி தேர்வில், தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து, கற்பிக்கும் வகுப்புகளில் இருந்து வினாக்களை தேர்வில் இடம்பெற செய்வது அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும்" என்றார்.
புரியாத புதிரான தீர்மானம்
இதற்கிடையே, 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், "இந்தியா முழுவதும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமும் மத்திய அரசும் கூறிய பிறகும் தமிழக அரசின் இந்த தீர்மானம் புரியாத புதிராகவே உள்ளது.
தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் மீண்டும் ஒரு நியமன தேர்வு, செப்டம்பர் மாதம் நடத்துவோம் என்று அறிவித்திருப்பது வேதனைக்குரியது.
பணியில் பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு தகுதி தேர்வு ரத்து, பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு, நியமனத் தேர்வு என்று அடுக்கடுக்காக தேர்வு நடத்தப்படும் என்று கூறியிருப்பது வேதனைக்கு உரியது.
சட்டப்பேரவை தீர்மானம்- இரட்டை வேடம்
இந்த நிலையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது இரட்டை வேடமாக தெரிகிறது. ஆசிரியர் பணியை கனவோடு எதிர்நோக்கி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இது பேரிடியாக உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில்லாமல் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவிக்கும் எங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நல்லதொரு தீர்வை வழங்கிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி