கண்ணீர் விடும் கரும்பலகைகள்! – ஆயிஷா இரா.நடராசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2026

கண்ணீர் விடும் கரும்பலகைகள்! – ஆயிஷா இரா.நடராசன்

கண்ணீர் விடும் கரும்பலகைகள்! – ஆயிஷா இரா.நடராசன்


*ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நாடு!*


இன்னொரு ஆசிரியர் தினம் வந்துவிட்டது… ஆனால் இன்று ஒரு நாள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை விதவிதமாக செயற்கை நுண்ணறிவு முதற்கொண்டு பயன்படுத்தி நம்முடைய திறன்பேசிகளில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டால் வேலை முடிந்ததா..


ஆசிரியர்களை மிக அதிகம் அவமானப்படுத்தும் நாடு என்கிற ஒரு தரப்பட்டியல் உலகில் வெளியிடப்பட்டால் கண்டிப்பாக முதலிடம் இந்தியாவிற்குத்தான் வழங்கப்படும்.. அதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு முதல் ஐந்து இடங்களுக்குள் நம்மால் வழங்கிவிட முடியும். அத்தனை அவமானங்களை சுமந்து கொண்டுதான் நம்முடைய ஆசிரியர்கள் பணிக்குச் செல்கிறார்கள்..


ஏனைய அலுவலகங்கள் திறப்பதற்கு 2 மணி நேரம் முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டு விடுகின்றன.. அதிகாலையில் இருள் சூழ்ந்த சூழலில் கண் விழித்து எத்தகைய சமரசமும் இல்லாமல் தனக்கான உணவை சமைத்து எடுத்துக்கொண்டு பல மைல் கடந்து வேலைக்குப் போகும் ஒரு ஆசிரியர்.. 1:00 நிமிடம் அல்லது 2:00 நிமிடம் தாமதமாக வந்தால்கூட.. சம்பளத்தை பிடித்துவிடும்.. பயோமெட்ரி மட்டும் இல்லாத பள்ளியே இல்லை..


குழந்தை படிக்கவில்லையா.. ஆசிரியரே பொறுப்பு.


மதிப்பெண் குறைந்து விட்டதா.. ஆசிரியரே  பொறுப்பு


ஒழுக்கப்பிரச்னை உள்ளதா.. ஆசிரியர் என்ன கிழிக்கிறார்.


பெற்றோர்களின் புகார்களா.. ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள்.


பள்ளியில் சாதி அடிப்படையில் வன்முறை.. ஆசிரியர்களை வரச் சொல்லி விசாரியுங்கள்.


பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்.. ஆசிரியர் என்னதான்  செய்து கொண்டிருக்கிறார்..


சத்துணவில் புழு.. தலைமை ஆசிரியரோடு பொறுப்பு ஆசிரியரையும் வரச் சொல்லுங்கள்.


தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிட்டதா.. சென்னைக்கு வந்து விளக்கம் எழுதி கொடுக்க ஆசிரியரை அனுப்புங்கள்..


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..


எங்கோ இங்கும் அங்குமாக நடக்கின்ற சிறு சம்பவங்களைக் காரணம் காட்டி அனைத்து ஆசிரியர்கள் மீதும் போக்சோ உட்பட அனைத்தையும் வைத்து ஒரு பெரிய மிரட்டலை மேற்கொள்ளும் சமூகத்தை என்ன செய்வது..


இன்று ஆசிரியர் தின கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து


எத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர்


சரி அப்படித்தான் கேள்வி கேட்கும் அளவிற்கு ஆசிரியர் நிலையை வைத்திருக்கிறீர்களா.. நாட்டில் 2024-25 UDISE தரவுகளின் படி 1.01 கோடி ஆசிரியர்கள் உள்ளனர்.. ஆனால் 1,04,125 பள்ளிக்கூடங்கள் ஒற்றை ஆசிரியர் பள்ளிக்கூடங்களாக உள்ளன.. இவற்றில் சுமார் 34,00,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.. இதில் ஏறக்குறைய 4000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன..


ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் செல்கிறார்


அங்கே அவர் தலைமை ஆசிரியராகவும் இருக்க வேண்டும்


அலுவலக ஊழியராகவும் இருக்க வேண்டும்


மணி அடிப்பவராகவும் இருக்க வேண்டும்


கேட் கீப்பராகவும் இருக்க வேண்டும்


பல பாடங்களை கற்பிக்க தெரிய வேண்டும்..


மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்..


தினந்தோறும் மாணவர்களின் வருகை  பதிவு அனுப்புவதில் இருந்து பள்ளிக்கு உரிய அனைத்து கோப்புகளையும் தயாரித்து எப்போது வேண்டுமானாலும் காட்ட வேண்டும்


ஆனாலும்..


நாம் அவரிடம் கேட்கிறோம் ஏன் தரமான கல்வி இல்லை..


மத்திய அரசு வெளியிட்டுக்கொண்டிருக்கும் பல புள்ளிவிவரங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். UDISE தரவுகளை மேற்கோள் காட்டி தேசிய அளவிலான PTR அதாவது மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம்(PUPIL-TEACHER RATIO) பல நிலைகளில் தேசிய புதிய கல்விக் கொள்கை (NEP) படி சரியாக இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது.(?)


அதாவது தொடக்கப் பள்ளி அளவில் மொத்தமாக பார்த்தால் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் 3,4, 5 வகுப்புகளில் 17 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரும்.. உயர்நிலை அளவில் 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரும் மேல்நிலை அளவில் 23 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரும் இருப்பதாக கணக்கிட்டு வெளியிட்டது.. பிறகுதான் அடிக்குறிப்பில் கவனித்தபொழுது அது தனியார் பள்ளிகளையும் சேர்த்த அளவீடாக இருக்கிறது இப்படி புள்ளிவிவரங்கள் வெளியிடுவதிலேயே மிகப் பெரிய மோசடியைப் பார்க்கிறோம்.


இதுதான் தேசிய சராசரி என்று அது அறிவித்துக் கொள்கிறது ஆனால் சராசரிக்குள் மறைந்திருக்கும் ஒரு ஆசிரியரின் கரும்பலகையில் இருந்து வழியும் கண்ணீர் பற்றி அது பேசுவதே இல்லை .. ஆனால் உண்மை நிலவரம் என்ன.. தமிழ்நாட்டின் நிலவரப்படி மட்டுமே.. புதிய ஆசிரியர் பணியிடங்கள் 1,14,248 என்று சென்ற ஆண்டு மட்டுமே அனுமதிக்கப்பட்டன.. அதில் இன்னும் நாம் ஏறக்குறைய 40,000 பணியிடங்கள்.. நிரப்பாமலேயே வைத்திருக்கிறோம் இதில் வேடிக்கை என்னவென்றால் இவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்து தொடக்கக் நிலையில் எத்தனை ஆசிரியர்கள் உயர் நிலையில் எத்தனை ஆசிரியர்கள் மேல்நிலையில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று கேட்டால் பதில் கொடுக்க திணறுகிறார்கள்.. நமக்கு தெரிந்து ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டார்கள் 1,214 பள்ளிகளில் தமிழ்நாட்டில் தலைமை ஆசிரியர் இல்லை.. இந்தியாவின் மாற்று அரசியல் தளத்தில் முதுகெலும்பாய் திகழும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகை கூற்றின்படி தமிழக அளவில் ஒரு ஆசிரியர் சராசரியாக மூன்று ஆசிரியர்களின் பணிகளை தோளில் சுமந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.. என்பதே உண்மை… தனியார் பள்ளிகளில் இந்த நிலைமை மேலும் மோசமாக இருக்கலாம்.


ஒரு ஆசிரியரின் தசாவதாரம்!


ஒரு ஆசிரியர் கற்பிக்கப் பிறந்தவர்.. ஆசிரியர் பணி புனிதமான பணி என்றெல்லாம் சொல்கிறோம்.. ஆனால் அவரை ஆசிரியராக மட்டுமா வைத்திருக்கிறீர்கள்.. ஆசிரியர் தினத்தன்று சற்றே உற்றுப் பாருங்கள்..


கற்பிக்கும் நேரத்தை விட்டு விட்டு.. இன்று இந்த ஆசிரியர் தினத்தன்று கூட உங்கள் வீட்டின் கதவைத் தட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பவர் யார்..


தேர்தல் பணி, சுகாதார கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல், ஆவண பணிகள், ஆன்லைன் பதிவு.. மற்றும் ஒரு அரசாங்கம் வழங்கும் எல்லாவிதமான பணிகள்.. என்று தசாவதாரம் எடுக்கும் ஆசிரியர்களின் நிலை மாற்றப்பட வேண்டும் என்று குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டம் 2009 ஆண்டில் அறிவித்தபொழுது என்ன நடந்தது.. எப்போது இந்த சட்டம் மாற்றப்பட்டது எப்போது நாடாளுமன்றத்தில் வைத்துப் பேசப்பட்டது ஆசிரியர் என்பவர் அனைத்தையும் தான் செய்ய வேண்டும் என்கிற ரீதியில் அது எப்போது திருத்தப்பட்டது.. இதுகுறித்த ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதா.. எதையும் நீங்கள் கேட்க முடியாது.


2026  ஆம் ஆண்டு தமிழக தேர்தல் பணியான BLO பனி கொடுத்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டதால் மூன்று ஆசிரியர்கள் தேர்தல் பூத் உள்ளேயே இறந்து போனார்களே இதையெல்லாம் எந்த கணக்கில் வைத்துள்ளார்கள்..


2024 த வீக் பத்திரிகையின்.. ஒரு கூற்றுப்படி மாதத்திற்கு சராசரியாக இந்தியாவில் மட்டுமே ஒன்பது ஆசிரியர்கள் பணியில் இருக்கும் பொழுதே மன அழுத்தம் தாங்காமல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என்பதை வாசித்தபொழுது மனம் கலங்கியது.


பதவி உயர்வு இடமாறுதல் இல்லை: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி


ஆசிரியர்களின் குரலை கேட்காத கல்வி அமைப்பு   


ஒரு ஆசிரியரிடம் நாம் தினமும் கேள்வி கேள் குழந்தைகளை கேள்வி கேட்க வை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.


ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு.. எப்படி பதில் சொல்லப்படுகிறது தெரியுமா..


இந்த கல்வி அமைப்பிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால் அவருடைய கோரிக்கையை போராட்டமாக அவர் மீது திணிக்கிறார்கள்.. போராட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றெல்லாம் அறிவித்து இறுதியில் ஆசிரியர் காவல் நிலையத்திற்கோ தடுப்புக் காவலுக்கோ அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதுதான் அவலமான சூழ்நிலை.. தமிழ்நாட்டில் 2025 ஆண்டில் டிசம்பர் மாதத்தில் சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் 2000 பேர் 13 திருமண மண்டபங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.. ஆசிரியர் பிரதிநிதிகள் 45 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார்கள். ஜனவரி 2026 ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.. முப்பத்தி ஏழு நாட்கள் நீடித்தபின் பிப்ரவரியில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது..


ஆனால் இந்த போராட்டத்தின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து எப்படியெல்லாம் அவர்கள் வேட்டையாடப்பட்டார்கள் என்பதை நான் தனியாக எழுத வேண்டியிருக்கும்..


ஆசிரியரை அவமானப்படுத்தும் பொருளாதார முரண்பாடு:


தமிழ்நாட்டில்.. இடைநிலை ஆசிரியர்களின் நிலை 2009 ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் அதன் பிறகு பணி அமர்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலான புதிய முரண்பாடு களையப்பட்டதா.. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வரிந்து கட்டும் இந்த காலகட்டத்தில் அன்றைய ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து என்று பொத்தாம் பொதுவாக அறிவித்து இருக்கிறார்கள்..


உண்மை நிலை என்ன? மீண்டும் மீண்டும் அந்த ஆசிரியர்கள் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.. ஒரே வகை குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார்கள் ஒரே பள்ளியில் வேலை பார்க்கிறார்கள் ஒரே தகுதித் தேர்வுகளை கடந்து வந்திருக்கிறார்கள்.. ஆனால் ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதியம் பன்னிரெண்டாயிரம் என்றும் இன்னொருவருக்கு வெறும் 5000 என்றும் வழங்கப்படுவதை எப்படி ஏற்க முடியும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்..


இதை தங்கள் குரலாக அவர்கள் எழுப்புகின்ற பொழுது செவி சாய்க்க யாரும் ஏன் முன்வரவில்லை. போராடும் ஆசிரியர்களை சிறையில் அடைத்து விட்டு.. ஆசிரியர் தின வாழ்த்து சொல்லும் சமூகம் நம் சமூகம்.


நம்முடைய கல்விமுறை பள்ளிக் கல்வியாக இருக்கட்டும் அல்லது பல்கலைக்கழக கல்வியாக இருக்கட்டும்.. அமைச்சகம்.. தலைமை கல்வி அதிகாரிகள் இயக்குநர்கள் இணை இயக்குனர்கள் துணை இயக்குநர்கள் வழியே மாவட்ட கல்வித் தலைமை வட்டார கல்வி தலைமை என்று பயணித்து தலைமை ஆசிரியர்கள் வழியே ஆசிரியர் மீது முழுமையான அதிகாரத்தை இறக்குகின்ற. பிரம்மாண்ட அதிகார பாராங்கல்லாக செயல்படுகிறது.. அனைவரது எடையும் சேர்க்கப்பட்ட கடைசி பாரத்தை ஆசிரியர் தலையில் கொண்டு வந்து கொட்டுகிறது..


 தேர்வு கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள்.. பேராசிரியர்கள்.


டெட் தேர்வு என்கிற பெயரில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 .. ஆசிரியர்களுக்கு நாலாண்டுகளுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை புகுத்தி இருக்கிறது.. தேர்வு நடத்துபவர்களை தேர்வு எழுதுபவர்களாக வைத்திருப்பதில் யாருக்கோ கொடூர மனம் வேலை செய்திருக்கிறது.. சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குரலில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்..


இந்த தீர்மானம் வெறும் கண் துடைப்பு தான் என்பது அவர்களுக்கும் தெரியும் நமக்கும் தெரியும்.. 8,00,00,000 இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் இந்த நாட்டில்.. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு நுழைவுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டே இருக்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.. என்கிறது ஃப்ரண்ட்லைன்.. ஐந்து பேரில் ஒருவருக்கு வேலை இல்லை.. வேலை இருக்கும் நான்கு பேரில் இரண்டு பேர் எப்போது வேண்டுமானாலும் வேலை போய்விடும் என்கிற நிலையில் இருக்கிறார்கள்.. அவர்கள் இருவருமே பெரும்பாலும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்.. என்கிற புள்ளிவிவரம் ஒன்று போதும்..


தமிழ்நாட்டில் இப்போது ஆசிரியர்களாக பணி செய்பவர்களில் தனியார் பள்ளிகளையும் சேர்த்து 63% பேர் 45 வயதுக்கும் உட்பட்டவர்கள்.. அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி நேரம் போக மீதி நேரம் முழுவதையும் TET தேர்வு NET தேர்வு என்று நுழைவு தேர்வு பயிற்சி மையங்களில் ஏராளமான பணம் செலவழித்து படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. எனவே பெரும்பாலான நம்முடைய ஆசிரியர்கள் பேராசிரியர்கள் தற்காலிக பணியில் இருந்துகொண்டே நெட்..TET.. என்று தயாரிப்பில் இருக்கும் பதட்டத்தில் வாழ்கிறார்கள்..


கல்லூரி பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாள் தற்போதைய உயர்கல்வித் துறையில் நடந்து கொண்டிருக்கும் அவலங்கள்போல தமிழ்நாட்டில் வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை.. இந்தியா முழுவதும் 6,00,000 பேர் சமீபத்தில் தேசிய தேர்வு முகமை நடத்திய நாடு தழுவிய உதவி பேராசிரியர் தகுதிக்கான NET தேர்வை எழுதினார்கள்.. அவற்றில் மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் கேள்வித்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்ததை சுட்டிக்காட்டி ரத்து செய்யப்பட்டன.. பல லட்சம் செலவு செய்து ஒரு நுழைவுத்தேர்வு பயிற்சி  மையத்தில்.. பல மணி நேரங்கள் செலவு செய்து .. தேர்வு ரத்து செய்யப்படும் பொழுது.. திரும்ப அதே பயிற்சி மையத்திற்கு படையெடுக்க வேண்டிய மறு  செலவு.. என்பதுதான் இங்கே உதவிப் பேராசிரியர்களாக முயற்சி செய்து கொண்டே இருக்கும் பல லட்சம் தற்காலிக ஆசிரியர்களின் நிலை.. தேர்வு எழுதிய 6,00,000 பேரில் 6% பேரை தான் தேர்வு செய்வோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது தேசிய தேர்வு முகமை.. எனவே அது நுழைவுத் தேர்வா நுழைய விடாத தேர்வா என்று கேட்கத் தோன்றுகிறது.


TET எனும் ஆசிரியர் தகுதிப் தேர்வின் முடிவுகளை எடுத்து ஆராய்ந்தால் இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.. ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மன உளைச்சல் வினாத்தாள்களில் காணப்படும் தவறான கேள்விகளும் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் தற்காலிக விடை குறிப்புகளில் உள்ள குளறுபடிகளும் ஒரு புறம்.. அண்மைக்கால தேர்வுகளில் தாள் இரண்டில் உள்ள 150 கேள்விகளில் சுமார் 145 கேள்விகளுக்கு அதாவது 96% விடை குறிப்புகள் வெளியிடப்பட்டபொழுது தேர்வர்களால் (சுமார்  35000 தேர்வர்கள்) புகாரளிக்கப்பட்டதென்றால் இந்த தேர்வு எப்படிப்பட்டது என்பதை நினைத்துப் பாருங்கள்..


ஆசிரியர்களை தகுதி அற்றவர்களாக வைத்திருப்பதற்கு ஒரு தேர்வு தேவையா. இதனால் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களில் தேர்ச்சியை இழக்கும் ஆசிரியர்கள் தேர்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம்..1% முதல் 6% வரையிலான ஆசிரியர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள் என்பது நம் ஆசிரியர்கள் பற்றிய அவர்களது தகுதி பற்றிய அளவுகோலா.. கண்டிப்பாக இல்லை..


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 2010 ஆம் ஆண்டுக்கு முன் அல்லது கல்வி உரிமை சட்டத்திற்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்கிற ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டு.. ஆசிரியர் தினம் என்று ஆசிரியர் பணி புனிதமானது என்று.. வெற்று வார்த்தை ஜாலங்கள் பேசுவதில் ஒரு அர்த்தமும் இல்லை.. 15 – 20 ஆண்டுகள் வரை வகுப்பறையில் சிறப்பாக கற்பித்து ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மூத்த ஆசிரியர்கள் பலர் மீண்டும் தகுதிப் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது.. எவ்வளவு கொடூரமானது..




தனியார் பள்ளி எனும் கண்ணீர் தேசம்.


இப்போது இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சினையில் தனியார் பள்ளி என்று ஒன்று இல்லை என்றால் பல லட்சம் பேர் வீதிகளில் வேலை இல்லாமல் இருப்பார்கள் என்பது உண்மைதான்.. ஏனைய நாடுகளில் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான உரிமை சட்டங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது.. தமிழ்நாட்டில் கிடையவே கிடையாது.. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான நலவாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அந்த ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை.. தேர்தல் வாக்குறுதியாக கூட கொடுப்பதற்கு யாருக்கும் மனமில்லை.


குறைந்தபட்ச ஊதியம் தனியார் ஆசிரியர்களுக்கு என்ன என்பதை அரசு அறிவிக்கவே இல்லை.. 2000 தருபவர்கள் இருக்கிறார்கள் 4000 பெறுபவர்கள் இருக்கிறார்கள் 10,000 பெற்றுக்கொண்டு பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தை நடத்துபவர்களே ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளையும்  கல்லூரிகளையும் நடத்துகிறார்கள் என்பது அதைவிட பெரிய அவலம்..


பெரும்பாலான சமயங்களில் பல பள்ளிகள் அதிக தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக காட்டி பின்னர் பெரிய தொகையை திரும்ப எடுத்துக்கொண்டு.. சம்பள பட்டியல் வேறு கையில் கிடைப்பது வேறு என்கிற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களை.. யார் கல்லூரி உதவி பேராசிரியர்களை  வைத்திருக்கிறது.. இந்த சூழலில் தனியார் பள்ளி என்றாலே வெறுப்பை உமிழ்கின்ற ஊடகங்கள்..


பகுதி நேர ஆசிரியர் என்று ஒரு பணி உள்ளது..2026 ஜனவரியின் தரவுகளை வைத்துப் பார்த்தால் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று அதிகம் உள்ளனர். அவர்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டதாக முந்தைய அரசு அறிவித்தது.. கட்டாயமாக போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார்கள் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.. வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற போராட்டத்தை பல வகையான நிர்பந்தங்களுடன் முடக்கினார்கள்..


வேலை மட்டும் பகுதிநேர வேலை என்று அழைக்கப்பட்டதே தவிர அவர்கள் பள்ளி நேரத்திற்கும் கடந்து அதிகமாக வேலை பார்க்கும் அவல நிலை தொடர்கிறது..


ஆசிரியரையும் மாணவரையும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் கல்விமுறை.


கல்வி முறையில் ஆசிரியர் என்பவர் வயது முதிர்ந்த மாணவர்.. மாணவர் என்பவர் வயதில் இளைய ஆசிரியர், என்பதே சரி.. ஆனால் நாம் பின்பற்றும் கல்விமுறை ஆசிரியர் என்பவரை கண்காணிப்பாளராகவும் மாணவரைக் கண்காணிக்கப்படுபவராகவும் ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்துகிறது..


இதன் மோசமான பின் விளைவுகளை ஆசிரியர்களே அனுபவிக்கிறார்கள்.. குழந்தையை அடிக்காதீர்கள் திட்டாதீர்கள் எதுவுமே சொல்லாதீர்கள் அவர்களுக்கு மன உளைச்சலை தராதீர்கள் என்று தினந்தோறும் ஆசிரியர்கள் மீது பாயும் அரசாணைகள் பல. வகுப்பறை விதிகளை பேண வேண்டும் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க வேண்டும்.. ஆனால் எதுவும் திட்டக் கூடாது அடிக்கக் கூடாது.. மன உளைச்சலை ஏற்படுத்தும் சொற்களை பயன்படுத்தக்கூடாது எந்த தண்டனையும் கொடுக்கக் கூடாது.. சரி..


🏫 அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல்!, அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள்  முன்னிலையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் கவனம்  பெற்றுள்ளன. பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் ...


ஆனால் அதற்கான மாற்று வழிகளை சரியாக ஆசிரியர்கள் பின்பற்றுமாறு பயிற்சிகள் தரப்பட்டதா.. ஆசிரியர்கள் கையிலிருந்து கோலை பிடுங்கி இருக்கிறீர்கள்.. அதற்கு மாற்றாக ஆசிரியர்களுக்கு கொஞ்சம் அதிக மரியாதையும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சில அடிப்படை விதிகளையும் பள்ளியில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா.. பெற்றோர்கள் மாணவர்களின்.. கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கம் அன்றாட செயல்பாடுகள் போன்றவற்றில் என்ன பொறுப்பை வகிக்கிறார்கள்..


கேட்டால் பள்ளிக்கூடத்தில்தான் மாணவர் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார் என்கிற ஒரு பெரிய பழியை சுமத்துகிறீர்கள்.. அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவருக்கு உள்ளே அனைத்து வகையான தீய கலாச்சாரங்களையும் கொண்டு வந்து கொட்டுகின்ற அவலமான அதிகார உள்ளூர் சமூக விரோதிகள்.. ஆசிரியர்கள் மீது பாய்வதற்கென்று போக்சோ முதல் ஜொனைல் சட்டம் வரை18 கிடுக்கிப் பிடி சட்டங்கள்.. ஆனால் இந்த சமூக விரோதிகளுக்கு எதிராக.. பள்ளிக்கூடத்தின் ஒழுங்குகளை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற ஆசிரியர்களுக்கு கிடைப்பதோ பணியிட மாற்றம் பதவி இழப்பு அவமானம்.. இதுகுறித்து பத்திரிகைகளோ அல்லது சமூகத்தின் பொது புத்தியோ எதையுமே பரிசீலிப்பது இல்லை. பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து ஆசிரியைகளை கொன்று விடும் காதல் மன்னர்கள்.. பள்ளிக்கூட புனிதத்தை கெடுத்து சீரழித்து அனைத்து வகையான சமூக விரோத செயல்களிலும் ஈடு படும்.. சீரழிவு மனிதர்களுக்கு எதிராக பிரத்யேக சட்டம் எதுவும் கிடையாது.


வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.


ஒரு நாட்டில் எத்தனை பேர் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புகிறார்கள் என்பதை வைத்து அந்த நாட்டின் அறிவுச்சூழலை அளவிட முடியும் என்று யுனெஸ்கோ சொல்கிறது. ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறு குழந்தை முதலில் விளையாடுவது ஆசிரியர் விளையாட்டு.. ஆனால்


ASER 2023 தரவுகள் என்ன சொல்கின்றன.. நம் நாட்டில் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்ட கிராமப்புற இளம் வயதினர்.. இடையே எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 43% பேர் பொறியியலாளர்களாகவும் 21% பேர் மருத்துவர்களாகவும்.. ஆக விரும்புகிறார்கள். 13% பேர் காவல்துறைக்கும் இன்னும் செவிலியர்.. இராணுவம்.. பெருந்தரவு எனும் டேட்டா சயின்ஸ்… எல்லாம் கடந்து 3% பேர் ஆசிரியர் பணி கிடைத்தால் செல்வேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.. இந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை சிந்தித்து தரமான வாழ்க்கையை அவர்களுக்கு அளித்து அதன் மூலம் தரமான கல்வியை நாம் கொண்டிருப்போம் என்றால் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தானே நம்முடைய குழந்தைகள் முதல் விருப்பத்தேர்வாகக் கொண்டிருக்க வேண்டும்.. செவிலியர் ஆக வேண்டும் என்பதையும் கடந்து கடைசி நிலைக்கு ஆசிரியர் பணி தள்ளப்பட்டுள்ளது என்பது அல்லவா உண்மை..


ஆசிரியரை மதிக்காத.. ஆசிரியர்கள் பணியை மரியாதைக்குரிய ஒரு பணியாக அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாத ஒரு சமூகம் ஆசிரியர் தினத்தன்று மட்டும் அதன் புனிதத்தன்மையை போற்றுகிறது.. இந்த நிலையில் ஆசிரியர் தினமே வேண்டாம் குரு பூர்ணிமா கொண்டாடுங்கள் என்று விஷயத்தை விஷமத்தனமாக திசை திருப்பும் ஒரு காவி அரசு..


எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று யாருக்கு சொல்வது நான்.


கண்ணீர் விடும் கரும்பலகைகள்.. கண்ணியம் காக்கும் கரும்பலகைகளாக அரசால் சமூகத்தால் உயர்த்தப்பட்டால்.. அப்போது நம்முடைய ஆசிரியர் தினம் உண்மை அர்த்தத்தைப் பெறும்.


📚 எழுதியவர் : 

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்

நன்றி: புக்டே தளம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி