சுகாதார சீர்கேட்டால் குறைந்த மாணவர் எண்ணிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2013

சுகாதார சீர்கேட்டால் குறைந்த மாணவர் எண்ணிக்கை.

ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என்ற காரணத்தால், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது என, கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் சுகாதார சீர்கேட்டால், மாதவரம்மண்டலத்தில், ஒரு அரசு துவக்கப் பள்ளியில், தற்போது 20 மாணவ, மாணவியர் மட்டுமே படிக்கின்றனர் என்றால், நம்ப முடிகிறதா?இந்த கல்வியாண்டில், எண்ணிக்கை மேலும் குறைந்து, பள்ளி மூடப்படுமோ என்ற
கவலையில் அப்பகுதிவாசிகள் மூழ்கியுள்ளனர்.சென்னை மாதவரம் மண்டலம் 31வது வார்டு, உடையார் தோட்டம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு, அரசு ஆதி திராவிட நல துவக்க பள்ளி உள்ளது. 2006ல் இங்கு ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றியிருக்கின்றனர். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு படித்தனர்.அதற்கடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. கடந்தாண்டு, 1 முதல் 5 வகுப்பு வரை மொத்தம் 31 மாணவ, மாணவியரும், இரண்டு ஆசிரியர்களும் இருந்தனர். இந்த கல்வியாண்டில், முதல் வகுப்பில் ஒரே ஒரு மாணவர், 2ம் வகுப்பில்4 பேர், 3ம் வகுப்பில் 5 பேர், 4ம் வகுப்பில் 3 பேர், 5ம் வகுப்பில் 7 பேர் என, மொத்தம் 20 மாணவ, மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். அவர்களுக்காக ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு, பள்ளியின் சுகாதாரம் சீரழிந்ததே காரணம் என்கின்றனர், இந்த பகுதி வாசிகள். பள்ளியின் கீழ் தளத்தில் மூன்று வகுப்பறைகள், மேல் தளத்தில் 3 வகுப்பறைகள் உள்ளன. கீழ் தளத்தின் ஒரு பகுதியில் சமைக்கப்படும் சத்துணவின் போது, விறகு அடுப்பு மூலம் உருவாகும் புகை, மேல் மாடியில் இருக்கும் மாணவர்களை நேரடியாக தாக்குகின்றது.சமீபத்தில் பள்ளியின் ஒரு பகுதியில் "தாட்கோ" மூலம் புதிய கழிப்பறை கட்டப்பட்டு, தண்ணீர் வசதியின்றி பூட்டிக் கிடக்கிறது பத்து ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தின் நுழைவு வாயிலில், பகுதிவாசிகளுக்கான இருபாலர்களுக்குரிய இரண்டு பொது கழிப்பறைகள் உள்ளன. காலை முதல் மாலை வரை பொது கழிப்பறைக்கு வருவோர் கழுவும் கழிவு நீர் பள்ளியின் வாசலில் தேங்குகிறது. மாலை முதல் காலை வரைபொது கழிப்பறைகள் மூடப்பட்டிருக்கும் போது, பள்ளியின் முன் புறமே பொது கழிப்பறையாக மாறிவிடுகிறது.பள்ளி வளாகத்தை சில விஷமிகள் இரவு நேரங்களில் திறந்த வெளி குடிமையமாக பயன்படுத்துகின்றனர். இதனால், காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் நடந்து வர முடியாத அளவிற்கும், வகுப்பறைகளில் யாரும் உட்கார முடியாத அளவிற்கும் துர்நாற்றம் வீசுகிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடியேற்ற, பள்ளி வளாகத்தில் நிரந்தர கொடிக்கம்பம் கூட கிடையாது. பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர், இந்த மோசமான சுற்றுச்சூழலால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தங்கள் பிள்ளைகளை மற்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.இப்போதுள்ள 20 மாணவ, மாணவியரும் அடுத்த ஆண்டு இதே பள்ளியில் படிப்பார்களா? என்ற பரிதாப நிலையும், அதனால் பள்ளியை மூடும் அவல நிலையும் இந்த அரசு பள்ளிக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த பள்ளியில் பணி உத்தரவு பெற்ற பல ஆசிரியர்கள், பள்ளி நிலைமையை பார்த்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல், இடம் மாற்றி கொண்டதும் நடந்திருக்கிறது.இது பற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "இன்றும் பல பகுதிகளில் அரசு பள்ளிகள் அமைய வாய்ப்பிருந்தும், அதற்கான போதியஇடமின்றி, மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆனால் இங்கு இட வசதி இருந்தும் அதை பயன்படுத்த முடியாத அளவிற்குபள்ளிக் கல்வி துறை அலட்சியம் காட்டுகிறது" என்றனர்.மேலும், "மாநகராட்சிக்குள் இந்த பள்ளி இருந்தாலும், திருவள்ளூர்மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும். வரும் கோடை விடுமுறையிலாவது பள்ளிக்கான சுற்றுச்சுவர், கொடி கம்பம் அமைத்து, பள்ளி பராமரிப்பிற்கு காவலாளியையும் நியமிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி