அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஓட்டுநர், நடத்துநர், இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கக் கோரியும் விளம்பரம் வெளியிட்டிருந்தது.

இதன்படி, கோவையைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் இளநிலை பொறியாளர் பணிக்காக விண்ணப்பித்தார். வருகிற 22-ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்குமாறு இவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, நேர்காணலில் பங்கேற்பதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாகம், தொழில்நுட்பம் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகே கோவை போக்குவரத்துக் கழகம் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இது சட்ட விரோதமானது. பணி நியமனம் தொடர்பாக இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களைத் தவிர, இனிமேல் நியமனம் செய்யப்படும் அனைத்து பணிகளும் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறக் கூடாது என கடந்த முறை உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுப்படியே பணி நியமனம் நடைபெற வேண்டும். எந்தவொரு அரசுப் பணியும் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நிரப்பக் கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

கோவைப் போக்குவரத்துக் கழகம் கடந்த மாதம் வெளியிட்ட விளம்பரத்தின்படி நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடாது. இந்த வழக்கின் உத்தரவையும், கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் நகலையும் போக்குவரத்துக் கழகச் செயலாளர், தமிழக அரசு ஆகியோருக்கு உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படியே பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், அதன் செயலாளர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

1 comment:

  1. பெசாவர் குழைந்தைகளுக்கு .....

    துப்பாக்கி எப்போது விறகாகும்

    என்னென்ன கனவோட
    என்னென்ன நினைவோட
    எல்லாமே போச்சையா
    துப்பாக்கி ரவையோட

    தொட்டா போதும்
    செவந்துபோகும் தோளுல
    பட்டா கத்தி பட்டிருச்சே
    ஐயையோ என்னாகும் ?

    ஐந்துவேளை தொழுகை
    அல்லாவுக்கு வேணுந்தா - உங்க
    தொழுகை சத்தம் மட்டும் எங்களோட
    அழுகையா கேட்கலையா ?

    பொட்டு வச்சா குத்தமின்னு
    சொல்லித்தா வளத்தீங்க
    ரத்ததில பொட்டு வச்ச
    குத்தத்த என்ன சொல்ல

    வாத்தியாரு அடுச்சாலே
    வாடிவிடும் புள்ளைங்க
    துப்பாக்கி குண்டுதாங்க
    வலுவிருக்கா சொல்லுங்க

    ஈவு இரக்கமெல்லாம்
    துளிகூட இல்லையா -உங்க
    யுத்த களத்துக்கு
    பட்டாம்பூச்சிகள் தொல்லையா ?

    என்னதா இருந்தாலும்
    எங்கமேல கோபமா
    இப்பவாச்சும் உங்களோட
    கோபந்தான் தீருமா ?

    சிங்கத்தின் கோபத்துக்கு
    காட்டெருமை இரையாகும்
    அணில்பிள்ளைய கொள்ளுறது
    எப்படிங்க முறையாகும்

    பட்டுபுழு கூட்டுக்குள்ள
    பாம்புவந்தா என்னாகும் - உங்க
    துப்பாக்கி கட்டையெல்லாம்
    எப்போது விறகாகும்

    போராட்ட களமெல்லாம்
    வெண்புறாக்கள் பறக்கட்டும்
    இருந்தாலும் உங்கள
    அன்பே உருவான
    அல்லாவே கேட்கட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி