மலை கிராம மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது. கல்வி சுற்றுலா, ஒரிகாமி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் அக்னிபாவி எனும் மலைக்கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
வனப்பொருட்களை சேகரித்து விற்பதும், விவசாய கூலி வேலைக்கு செல்வதும் இவர்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இக்கிராமத்தில் உள்ளோர் வருடத்தின் பாதி நாட்கள் கரும்புவெட்டுதல், மூங்கில் வெட்டுதல், செங்கல் சூளைகளில் பணிபுரிதல், கட்டிட வேலை ஆகியவற்றிற்கு சத்தியமங்கலம், ஈரோடு, கோபி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அவர்கள் அழைத்து சென்று வந்தனர். இதனால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அவர்கள் குழந்தை தொழிலாளர்களாகவும் மாற்றப்பட்டு வந்தனர்.இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலமாக தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளி இப்பகுதியில்நிறுவப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் சுடர் தொண்டு நிறுவனத்தினர் இந்த பள்ளியை நடத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இப்பள்ளியில் தற்போது 35 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர் எந்த ஊருக்கு வேலைக்கு சென்றாலும், குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து கல்வி கற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பள்ளியில் உள்ள பாடதிட்டத்துடன், கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, இவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு மாதந்தோறும் ரூ.150ஐ மத்திய அரசு வழங்குகிறது.அரசின் இத்தகைய சலுகைகளுப் பிறகும் அவ்வப்போது இம்மாணவர்கள் கரும்புவெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதால் அவர்களின் கல்வி அவ்வப்போது தடைபட்டு வருகிறது.
இதையடுத்து, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கொடையாளர்களின் உதவியுடன் ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லுதல், ஒரிகாமி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்தல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், ஆவணப்படங்கள் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை பள்ளியை நடத்தும் சுடர் நிறுவனம் செய்து வருகிறது.இக்கிராமத்தில் உள்ளோர் குடிசைகளில் தான் வசித்துவருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின்வசதி இல்லாததால், மாணவர்களை தொடந்து பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இக்குடும்பங்களுக்கு சோலார் விளக்கு அளித்திட முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள கொடையாளர்களின் உதவியுடன் அக்னிபாவி கிராமத்தில் உள்ள தேசிய குழந்தைத்தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு தொடர்ந்து குழந்தைகளை அனுப்பும் 20 பெற்றோர்களுக்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சென்னை ட்ரீம் அலைவ் சங்கராமகாலிங்கம், களம் புதிது காந்தி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் எஸ்.சிவானந்தன், சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் செ.சி.நடராஜ், பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ், இளங்கோ, தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Thanks for sharing its helpful
ReplyDeleteTamilnadu SSLC