கற்றல் அடைவு தேர்வில் 35 சதவீதம் பேர் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2015

கற்றல் அடைவு தேர்வில் 35 சதவீதம் பேர் தேர்ச்சி


சேலம்: கற்றல் அடைவுத்திறன் தேர்வில், வெறும் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, அரசு நிர்பந்தம் செய்வது, நடைமுறை ரீதியாக சாத்தியமானதா என, கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2012ல், அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல் ஆகிய அறிவை சோதிக்கும் வகையில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு (தற்போது 10ம் வகுப்பு) நடத்திய அடைவுத்திறன் தேர்வில், வெறும், 35 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்கள், விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என அரசும், அதிகாரிகளும் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 2012ம் ஆண்டில், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒன்றியத்துக்கு, 10 பள்ளிகள் வீதம், 'ரேண்டம்' முறையில், தேர்வு செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.

* இதில், தமிழ் பாடத்தில், 61 சதவீதம், ஆங்கில பாடத்தில், 39 சதவீதம், கணிதப்பாடத்தில், 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

* அடிப்படை திறன்களான எழுதுதல், படித்தல், அடிப்படை கணிதத்திறன் ஆகியவை கூட தெரியாமல், கிட்டத்தட்ட, 65 சதவீத மாணவர்கள் இருந்துள்ளதை, அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை எழுதப்படிக்கக்கூட தெரியாமல், பள்ளிக்கு வந்த மாணவர்கள் தான், தற்போது, 10ம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.

* இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசும், அதிகாரிகளும் உணர்வதில்லை.

* இன்று அரசு பள்ளிகளில், மாணவர்கள் தான், ஆசிரியர்களை மிரட்டும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில், அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில், சிறிது பிசகினாலும், அவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிட வாய்ப்புள்ளது.

* எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்தும், அவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில், அடிப்படை திறன்களை கற்றுக்கொடுக்காத, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வித கெடுபிடியும் இல்லை.

* ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிபெற வைக்க வேண்டும் என கூறுகின்றனர். தவறினால், ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது.

* இதனால், மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடம் நடத்த வேண்டும் என்ற நிலை மாறி, மனப்பாடம் செய்ய வைத்து, தேர்ச்சி பெற்றுவிட்டால் போதும் என்ற போக்கில், பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

* தேர்ச்சி சதவீதம் அதிகரித்தால் தான், கல்வித்தரம் அதிகரிக்கும் என்ற மனப்போக்கை, அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் பின்பற்ற ஆரம்பித்திருப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

2 comments:

  1. 100% சதவீத தேர்ச்சி கல்வியின் வீழ்ச்சி

    ReplyDelete
  2. Kadakal illadha kattadam....veekathai valarchi eandru thavaraaga purindhu kondargal....


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி