ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் குளறுபடி: கண்டுபிடித்து சரி செய்ய குழு அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் குளறுபடி: கண்டுபிடித்து சரி செய்ய குழு அமைப்பு

தமிழகத்தில் சம்பளம் வழங்குவதில், 75 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 35 ஆயிரம் பேர் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். காணாமல் போன, 40 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பளம் பெறும் தலைப்பை கண்டுபிடித்து, முறையாக மாற்றுவதற்காக, மாவட்டந்தோறும் குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், 5,000த்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.


இவற்றில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், இயலாக்குழந்தைகளுக்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களும், கடந்த சில ஆண்டுகளாக, புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களும், தற்காலிக பணியிடங்களாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பணி நீட்டிப்பு அரசாணை வழங்கப்பட வேண்டும். இதுபோன்று, 75 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய நிலையில், 35 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே, இந்த தலைப்பின் கீழ், சம்பளம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள, 40 ஆயிரம் ஆசிரியர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஏற்படுத்திய குளறுபடிகளால், வேறு தலைப்பிலோ அல்லது நிரந்தர பணியிட சம்பளமோ பெற்று வருவதால், நிதி தணிக்கையில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக பணியிடங்களுக்கான, சம்பளத்தை சரியான தலைப்பில் பெற்று வருகின்றனரா என்பது குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிடம், பள்ளிகளில் பணியிடம் ஏற்படுத்திய விதம் குறித்த அரசாணை, தற்போது பெறப்பட்டு வரும் சம்பள தலைப்பு, அதில் ஏற்பட்டுள்ளகுளறுபடி உள்ளிட்டவைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல பள்ளி தலைமை ஆசிரியர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தற்காலிக பணியிடங்களுக்கு, அதற்கான தலைப்பில் சம்பளம் பெற்றுத்தராமல், நிரந்தர பணியிட தலைப்பில், பெற்று வழங்கி வருகின்றனர். இதை கண்டுபிடித்து, சரி செய்ய, இந்த ஆய்வு தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி